Corse தீவுக்கு சுயாட்சி..? - ஜனாதிபதி மக்ரோன் ஆலோசனை..
29 புரட்டாசி 2023 வெள்ளி 08:21 | பார்வைகள் : 4715
பிரான்சின் கடல்கடந்த நிர்வாக பிரிவான (Collectivité de Corse) கோர்சிகா தீவுக்கு ‘சுயாட்சி’ கொண்டுவருவதற்கான ஆலோசனை ஒன்றை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் முன்மொழிந்துள்ளார்.
கோர்சிகா தீவு மக்கள் மிக நீண்டகாலமாக இந்த சுயாட்சிக்காக போராடி வருகின்றனர். பிரான்சில் சிறைவைக்கப்பட்டிருந்த போராட்ட வீரரான Yvan Colonna சிறையில் வைத்து சக கைதி ஒருவரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டிருந்தார். ஒருவருடத்துக்கு முன்னதாக இடம்பெற்ற இந்த கொலைச் சம்பவத்தினால் கோர்சிகா தீவில் பலத்த வன்முறை வெடித்திருந்தது. கோர்சிகாவை சுயாட்சி முறைக்கு கொண்டுவரும் கோரிக்கையும் மிகவும் தீவிரமானது.
இந்நிலையில், கோர்சிகா தீவின் தலைநகரான Ajaccio இற்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்று வியாழக்கிழமை பயணித்திருந்தார். அங்கு பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது இது தொடர்பாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
கோர்சிகா தீவினை சுயாட்சிக்கு கொண்டுவருவதற்குரிய ஒப்பந்தம் ஒன்றையும், கோரிக்கை ஒன்றையும் கொண்ட ஒரு வரைவை அடுத்த ஆறுமாத காலத்துக்குள் உருவாக்கி பரிசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். அதன்பின்னர் இந்த வரைவு பிரெஞ்சுப் பாராளுமன்றத்தில் வாசிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கோர்சிகாவை தன்னாட்சியாக மாற்றுவது அத்தனை எளிதான விடயம் இல்லை எனவும் அரசியல் அவதானிப்பாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.