‘இறைவன்’ படம் எப்படி இருக்கு?
29 புரட்டாசி 2023 வெள்ளி 11:11 | பார்வைகள் : 4058
ஜெயம் ரவி, நயன்தாரா, ராகுல் போஸ் நடிப்பில் அகமது இயக்கத்தில் உருவாகியுள்ள இறைவன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. சீரியல் கில்லர் சைக்கோ பட பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் யூடிபில் வெளியாகி பலரது வரவேற்பையும் பெற்றது.
பெண்களை கடத்தி கொலை செய்யும் கொலையாளியை கண்டுபிடிக்க களம் இறங்கும் நாயகன் ஜெயம் ரவி ஒரு கட்டத்தில் கொலையாளியை கைது செய்து சிறையில் அடைக்கிறார்.ஆனால் அக்கொலையாளி சிறையில் இருந்து தப்பி சென்று நாயகனை பழிவாங்க துடிக்கிறார். அதில் நாயகனுக்கு என்ன ஆனது, வில்லன் ஏன் சைக்கோவாக மாறி பெண்களை கொலை செய்கிறான் என்கிற காரணத்திற்காக ஒரு பிளாஷ்பேக் என வழக்கமான ஒரு திரைக்கதையிலேயே படம் நகர்கிறது.
படத்திற்கு தேவையே இல்லாமல் ஒரு கதாநாயகியாக நயன்தாரா. நாயகன் ஜெயம் ரவிக்கும் நயன்தாராவிற்கும் பெரிதாக நடிப்பிற்கு ஸ்கோப் இல்லை.ஜெயம் ரவியின் நெருங்கிய நண்பராக வரும் நரேன் அவருடைய கதாபாத்திரத்தை ஓரளவு நியாயப்படுத்தியுள்ளார். படத்தின் முதல் பாதையில் தேவையில்லாமல் பல காட்சிகள் மற்றும் காதல் பாடல் இடம்பெற்றுள்ளது சற்று சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது.
ஒரு சிறப்பான சைக்கோ ட்ரைலர் படத்திற்கு ஆணிவேரே ரசிகர்களை அவ்வப்போது திகில் அடையச் செய்யுமாறு காட்சி அமைப்புகள் இடம் பெற்றிருக்கும். ஆனால் இந்த இறைவனில் கொடூரமான கொலைகள் மற்றும் சடலங்கள், தெறிக்கும் ரத்தம் என காண்பித்தும் ரசிகர்களிடையே ஒரு பதட்டத்தை ஏற்படுத்த தவறி விட்டனர்.
அடுத்தடுத்து என்ன நிகழும் என்பதை மிக எளிதாகவே ரசிகர்கள் கணித்து விடும் படியாக வலுவிழந்த திரைக்கதை.இடைவெளிக்குப்பின் திரைக்கதை மிக மிக மெதுவாக செல்வது ஒருவித சலிப்பை தருகிறது. கடைசி 30 நிமிடத்தில் ஸ்கோர் செய்கிறார் வினோத் கிஷன். யுவன் சங்கர் ராஜாவின் இசை நன்றாக இருந்தாலும் திரைக்கதை வலுவாக இல்லாத காரணத்தினால் பின்னணி இசையும் நீர்த்துப் போகிறது.
இதைத் தவிர படத்தின் பாசிட்டிவ் ஹரி கே வேதாந்தின் ஒளிப்பதிவு. சிறப்பான சைக்கோ திரில்லர் படமாக இருக்கும் என எதிர்பார்த்து இப்படத்தை பார்க்க திரையரங்கிற்கு சென்றவர்களுக்கு சற்று ஏமாற்றத்தையே அளித்துள்ளது இறைவன்.