கோவையில் ரூ.3,749 கோடி கடனுதவி: வழங்குகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
3 ஐப்பசி 2023 செவ்வாய் 04:59 | பார்வைகள் : 4135
கோவை கொடிசியா கண்காட்சி வளாகத்தில், இன்று நடக்கும் மாபெரும் கடன் வழங்கும் முகாமில், ரூ.3,749 கோடி மதிப்பிலான கடனுதவிகளை, பிரதமரின் கடன் திட்டங்களின் கீழ், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்குகிறார். மத்திய பா.ஜ., அரசு, இந்திய சுதந்திர அமுத கால திட்டங்களில் ஒன்றாக, தொழில்வளர்ச்சியை ஊக்குவிக்க, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் வாயிலாக, மெகா கடனுதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோவை கொடிசியா வளாகத்தில், இன்று காலை 10:00 மணிக்கு, மாநில அளவிலான வங்கிகள் குழு (எஸ்.எல்.பி.சி.,) கன்வீனர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி சார்பில், கடனுதவி திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை வகித்து, கோவை மாவட்டத்தை சேர்ந்த 948 வங்கிக் கிளைகள் வாயிலாக, 3,749 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவி வழங்குகிறார்.
மத்திய திட்டங்கள் வேளாண் உள்கட்டமைப்பு நிதி (ஏ.ஐ.எப்.,), பிரதம மந்திரியின் குறுந்தொழில் உணவு பதன்செய் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் (பி.எம்.எப்.எம்.இ.,), பிரதம மந்திரி சுரக் ஷா பீமா யோஜனா - மத்திய அரசின் விபத்துக் காப்பீடு திட்டம் (பி.எம்.எஸ்.பி.ஒய்.,), பயிர்க்கடன் அட்டை திட்டம் (கே.சி.சி.,)பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா - மத்திய அரசின் ஆயுள்காப்பீடு திட்டம் (பி.எம்.ஜே.ஜே.பி.ஒய்.,), பிரதம மந்திரியின் சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம் (பி.எம்.ஸ்வநிதி), பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம், பிரதமரின் முத்ரா யோஜனா, ஸ்டாண்ட் அப் இந்தியா, அடல் பென்ஷன் யோஜனா உள்ளிட்ட திட்டங்களின் கீழ், கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. சுயதொழில் செய்வோர், குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோர், சாலையோர வியாபாரிகள், பெண்கள், வேளாண் உற்பத்தியாளர்கள், பட்டதாரிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், மாணவர்கள் என, ஆயிரக்கணக்கான பயனாளிகள் கடனுதவி பெறுகின்றனர்
பங்கேற்கும் வங்கிகள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா,இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, பரோடா வங்கி, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, சவுத் இந்தியன் வங்கி, ஆக்சிஸ் வங்கி, டி.பி.எஸ்., யூகோ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, கோடாக் வங்கி, பெடரல் பேங்க், ஐ.டி.பி.ஐ., பேங்க், கரூர் வைஸ்யா வங்கி, பேங்க் ஆப் இந்தியா, தனலட்சுமி வங்கி, பந்தன் வங்கி, சிட்பி, ஜன ஸ்மால் பைனான்ஸ் வங்கி, ஹெச்.டி.எப்.சி., வங்கி, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, கர்நாடகா வங்கி, சி.எஸ்.பி., வங்கி, ஜே அண்டு கே வங்கி, இன்டஸ்இந்த் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, இ.எஸ்.ஏ.எப்., நபார்டு, யெஸ் பேங்க், உஜ்ஜீவன், தமிழ்நாடு கிராம வங்கி, பஞ்சாப் அண்டு சிந்து வங்கி உள்ளிட்ட வங்கிகள் கடனுதவி வழங்கும் திட்டத்தில் பங்கேற்கின்றன. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி அஜய்குமார் ஸ்ரீவஸ்தவா, கலெக்டர் கிராந்திகுமார், பல்வேறு வங்கிகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.