முதுமை இயலாமையின் அடையாளம் அல்ல
4 ஐப்பசி 2023 புதன் 04:31 | பார்வைகள் : 3153
சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு இக்கட்டுரையை எழுத அமர்ந்தபோது சீனு ராமசாமியின் இந்த வரிகள்தான் நினைவுக்கு வந்தன. நம்மில் பெரும்பாலானோரின் பால்ய காலம் என்பது நம்முடைய தாத்தாக்கள், பாட்டிகளால் நிரம்பியவை தான். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் பால்யத்தைக் கடக்கும்போது தாத்தா, பாட்டிகளையும் கடந்துவிடுகிறோம். அவர்களின் அறிவுரைகள் காலத்துக்குப் பொருந்தாதவையாகத் தோன்ற ஆரம்பிக்கின்றன. நிற்க அவகாசமின்றிச் சுழலும் காலச்சக்கரத்தில் அவர்களுடன் செலவிடும் நேரம் அநாவசியமானதாகிவிடுகிறது. ஆனால் நம்முடைய பால்யத்தை அழகாக்கியவர்கள் காலவோட்டத்தில் முதுமை எய்தும்போது அவர்களை சுமையாகக்கருதித் தூரநிறுத்துவது ஏற்புடையதா? ஒருகாலத்தில் முதுமை நம்மையும் அணுகும் அல்லவா? என்ற கேள்வியை ஒருமுறை நம்மை நாமே கேட்டுப்பார்த்துக்கொள்வோம். அந்தக் கேள்வியே வயது முதிர்ந்தவர்களின் தேவைகளையும், அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளையும், அவற்றுக்கான தீர்வுகளையும் கண்டடைவதற்கான தேடலை நம்முள் விதைக்கும்.
ஐக்கிய நாடுகள் சபையானது 60 வயதுக்கு மேற்பட்டோரை முதியோராக வரையறுக்கும் அதேவேளை, உலகப்பொருளாதாரம் 64 வயதை பிறரை சார்ந்து தங்கிவாழும் வயதெல்லையாக நிர்ணயித்திருக்கிறது. எதுஎவ்வாறிருப்பினும் இலங்கையில் 60 வயதே ஓய்வுபெறும் வயதெல்லையாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட புள்ளிவிபர இணையத்தளமான 'வேல்டோமீற்றர்' (Worldo meter) இன் தரவுகளின் பிரகாரம் 2022 ஜுனில் இலங்கையின் சனத்தொகை 21,586,581 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை 2021 ஒக்டோபரில் உலக வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி இலங்கையின் மொத்த சனத்தொகையில் 12.3 சதவீதமானோர் 60 வயதுக்கு மேற்பட்டோராக, அதாவது முதியவர்களாகக் காணப்படுகின்றனர்.
அதுமாத்திரமன்றி தெற்காசியாவில் அதிக முதியவர்களைக்கொண்ட நாடாக இலங்கை இருப்பதாக அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. முதியவர்களின் எண்ணிக்கை உயர்வாகக் காணப்படுதல் என்பது மனித அபிவிருத்திச் சுட்டெண்ணின்படி 76 ஆவது இடத்திலுள்ள இலங்கை முகங்கொடுத்திருக்கும் முக்கிய சவாலாகும். ஏனெனில் முன்னர் 65 ஆகக் காணப்பட்ட ஓய்வுபெறும் வயதெல்லை பின்னர் 60 ஆகக் குறைக்கப்பட்டமையும், நாட்டின் பொருளாதாரத்துக்குப் பங்களிப்புச்செய்யக்கூடிய நிலையிலுள்ள முதியவர்களுக்கு ஏற்றவாறான கட்டமைப்பையும், வாய்ப்புக்களையும் உருவாக்குவதற்கு அரசாங்கம் தவறியிருப்பதும் நாட்டில் தங்கிவாழ்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வழிகோலியிருப்பதுடன், இது உழைக்கும் மக்கள் மீதான நிதிசார் அழுத்தத்தின் அளவை அதிகரித்துள்ளது.
இலங்கையில் 33.95 வருடங்கள் என்பது அனைத்துப் பிரஜைகளும் உயிர்வாழும் சராசரி வயதாகக் கணிப்பிடப்பட்டிருப்பதுடன், பெண்களின் ஆயுட்காலம் சராசரியாக 80.4 வருடங்களாகவும், ஆண்களின் ஆயுட்காலம் சராசரியாக 73.8 வருடங்களாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே 60 வயதில் ஓய்வுபெறும் முதியவர்களில் பெரும்பான்மையானோர் சுமார் 10 – 20 ஆண்டுகள் மிகக்கடினமானதொரு வாழ்க்கையை வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அதிலும் இலங்கை போன்ற நாடுகளில் திருமணத்தின்போது பெண்ணின் வயது ஆணின் வயதை விடவும் குறைவாக இருப்பதனால், பெண்கள் முதுமையடையும்போது துணையின்றி நீண்ட காலம் வாழவேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகின்றனர்.
இலங்கையைத் தளமாகக் கொண்டியங்கி வரும் சமூக அக்கறை மையத்தினால் (Centre for Social Concerns) அண்மையில் வெளியிடப்பட்ட 'வயது முதிர்ந்த பெண்களின் நிலைமை தொடர்பான ஆய்வு' (Assessment of the status of Older Women) அறிக்கையில், 'இலங்கையின் மொத்த சனத்தொகையில் வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்ற போதிலும், அதனை உரியவாறு கையாள்வதற்கு இலங்கை அரசாங்கம் மட்டுப்படுத்தப்பட்டளவிலான ஆயத்தங்களையே மேற்கொண்டிருக்கின்றது' எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி, 'இலங்கைச் சமூகத்தில் முதியோரை மதிக்கும் கலாசாரம் இருப்பதாகக் கூறப்பட்டாலும், பால்நிலை, உடற்திறன், இனம், சாதி, குடும்பநிலை, பொருளாதாரநிலை போன்ற ஏனைய காரணிகளுடன் வயது அடிப்படையிலும் பாகுபாடு காண்பிக்கப்படுகின்றது. அத்தோடு 30 வருட கால யுத்தம், கொவிட் - 19 பெருந்தொற்று, அண்மைய பொருளாதார நெருக்கடி என்பன நாட்டின் வறுமை நிலையை மேலும் தீவிரப்படுத்தியிருப்பதுடன், வறியவர்களாக இருக்கும் வயது முதிர்ந்தோர் மீது நேரடித்தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது' என்றும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் கிராமிய, நகர்ப்புற, பெருந்தோட்ட, மீன்பிடி மற்றும் விவசாயப் பிரதேசங்களை உள்ளடக்கிய 10 மாவட்டங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட வயது முதிர்ந்த 299 பெண்கள் மற்றும் வயது முதிர்ந்த 52 ஆண்களை அடிப்படையாகக்கொண்டு சமூக அக்கறை மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளின்படி 51.9 சதவீதமானோர் பிள்ளைகளுடனும், 38.5 சதவீதமானோர் வாழ்க்கைத்துணையுடனும், 7.7 சதவீதமானோர் தனியாகவும், 1.9 சதவீதமானோர் உறவினர்களுடனும் வாழ்கின்றனர்.
அதேபோன்று அவர்களில் 60 – 69 வயதுக்கு இடைப்பட்டோரில் (இருபாலாரும்) 116 பேரும், 70 -– 79 வயதுக்கு இடைப்பட்டோரில் 77 பேரும், 80 வயதுக்கு மேற்பட்டோரில் 20 பேரும் தற்போதும் தொழில்புரிவதன் மூலம் வருமானம் உழைக்கின்றனர். மேலும் 60 - 69 வயதுக்கு இடைப்பட்டோரில் (இருபாலாரும்) 91 பேரும், 70 – 79 வயதுக்கு இடைப்பட்டோரில் 63 பேரும், 80 வயதுக்கு மேற்பட்டோரில் 18 பேரும் சுயதொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.
எனவே நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட வயது முதிர்ந்த 351 பேரை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் பெரும்பான்மையான முதியோர்கள் ஏதேனுமொரு தொழிலில் ஈடுபடுவதையும் தாம் தங்கிவாழும் வீட்டுக்கும் நாட்டுக்கும் பொருளாதார ரீதியில் பங்களிப்புச்செய்வதையும் காண்பிக்கின்றது. எனவே ஓய்வுபெறும் வயதெல்லையைக் குறைப்பதற்குப் பதிலாக வயது முதிர்ந்தோருக்கு ஏற்றவாறான மிகை அழுத்தமற்ற வேலைவாய்ப்புக்களை விரிவுபடுத்துவதன் மூலமும், அவர்களுக்கு அவசியமான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதன் மூலமும் நாட்டின் பொருளாதாரம் நன்மையடையும் அதேவேளை, தனிமையின் விளைவாக முதியவர்கள் முகங்கொடுக்கும் உளவியல் சிக்கல்களையும் ஓரளவுக்கு சுமுகமாகக் கையாள முடியும்.
இருப்பினும் முதுமையில் தவிர்க்கமுடியாமல் முகங்கொடுக்க நேரும் நோய்நிலைமைகள் முதியவர்களுக்கும், அவர்களை சார்ந்தோருக்கும், சுகாதாரத்துறைக்கான மிகையான செலவினத்தின் விளைவாக நாட்டின் பொருளாதாரத்துக்கும் முக்கிய சவாலாகக் காணப்படுகின்றன. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, கண்புரை, பல் பிரச்சினைகள், மூச்சுத்திணறல், மூட்டுவாதம், சிறுநீரகநோய், புற்றுநோய், இருதயநோய் போன்றன பெரும்பான்மையான முதியோரைத் தாக்கும் நோய்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. எனவே முதியோருக்கான சுகாதாரசேவைக் கிடைப்பனவை இலகுபடுத்துவதன் மூலமும், அதில் சீரான தன்மையைப் பேணுவதன் மூலமும் இந்நோய்நிலைமைகளின் தீவிரத்தன்மையைக் குறைத்துக்கொள்ளலாம். அதுமாத்திரமன்றி முதியவர்கள் மத்தியிலான நோய்நிலைமையைக் குணப்படுத்துதல் மற்றும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல் ஆகியவற்றின் ஊடாக சுகாதாரத்துறை மீதான சுமையையும் பகுதியளவில் குறைத்துக்கொள்ளமுடியும்.
இவற்றுக்கு மேலதிகமாக முதியோர்களுக்கான கட்டமைப்புக்களின் செயற்திறனை மேம்படுத்தல், முதியோர்களுக்கான நடமாடும் சுகாதாரசேவை வசதிகளை ஏற்படுத்தல், முதியவர்கள் சமூகத்துடன் ஊடாடுவதற்கு அவசியமான வசதிகளை விரிவுபடுத்தல் (உதாரணமாக வயது முதிர்ந்தோர் சுமுகமான முறையில் பயன்படுத்தக்கூடியவாறான போக்குவரத்து சேவை), முதுமையில் ஏற்படத்தக்க நோய்நிலைமைகள் தொடர்பில் குடும்ப மற்றும் சமூக மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தல், முதியோருக்கான நிலையான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக்கூடியவாறான நிதியுதவி செயற்திட்டங்களை அறிமுகப்படுத்தல், தங்கிவாழ்வோர் தொடர்பான கொள்கை வழிகாட்டல்களைத் தயாரித்தல், தொழில்வாய்ப்புக்களில் வயது அடிப்படையிலான பாகுபாட்டை நீக்கல், முதியோருக்கு ஏற்றவாறான வேலைவாய்ப்புக்களை உருவாக்கல், மூப்படைதல் தொடர்பில் சமூகத்தின் மத்தியில் நேர்மறையான சிந்தனையைக் கட்டியெழுப்பல் போன்ற நடவடிக்கைகளை தத்தமது வகிபாகத்துக்கு அமைவாக அரசாங்கம், நிதிக்கட்டமைப்புக்கள், தனியார் துறையினர், ஊடகங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் உள்ளிட்ட சகல தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுப்பதன் மூலம் நாட்டிலுள்ள முதியோர் சனத்தொகையின் தேவைகளைப் பூர்த்திசெய்யவும், அவர்களின் அறிவு மற்றும் அனுபவத்தின் மூலம் உச்ச பயனடையவும் முடியுமென சமூக அக்கறை மையம் சுட்டிக்காட்டுகின்றது.
ஆக, முதுமை என்பது இயலாமையோ அல்லது சுமையோ அல்ல. மாறாக அது மனிதனாகப் பிறந்த அனைவரினதும் வாழ்வில் ஓரங்கம். எனவே முதுமையை இயலாமையின் அடையாளமாகப் பார்க்கும் சமூகத்தின் மனநிலையை மாற்றியமைக்கும் பொறுப்பு தனிமனிதனில் தொடங்கி அரசாங்கம் வரையிலான நாட்டின் சகல கட்டமைப்புக்களுக்கும் உண்டு. நேர்மறையைக் காணும் சிந்தனையோட்டமே ஆரோக்கியமான மாற்றத்தின் திறவுகோல்!
நன்றி வீரகேசரி