அனுசரித்து போகும் அரசியல் என்னிடம் கிடையாது: பா.ஜ., தலைவர் அண்ணாமலை
2 ஐப்பசி 2023 திங்கள் 12:56 | பார்வைகள் : 4198
என்னிடம் எப்போதும் அனுசரித்து போகும் அரசியல் கிடையாது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கோவையில் இருந்து டில்லி செல்லும் முன், விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: கூட்டணி முறிவு குறித்து, அறிக்கை கொடுக்க டில்லி செல்லவில்லை. யாத்திரையில் என்ன நடக்கிறது; எவ்வளவு ஆதரவு கிடைத்துள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்கவே டில்லி செல்கிறேன். கூட்டணி குறித்து தலைவர்கள் சரியான நேரத்தில் பேசுவர். அரசியலில் என்னுடைய கருத்துக்களை, எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டேன். மோடி போன்ற இன்னொரு தலைவர் வரமாட்டார் என்பதால், அவருக்காக அரசியலில் உள்ளேன். அண்ணாமலையிடம், 'அட்ஜஸ்ட்மென்ட் பாலிடிக்ஸ்' எப்போதும் கிடையாது. எந்த கட்சியை பற்றியும் நான் உயர்த்தியோ, தாழ்த்தியோ பேசவில்லை. கம்யூனிஸ்ட் இயக்கம் தி.மு.க.,வை புகழ்வதற்கு, ஆதரித்து பேசுவதற்கான இயக்கமாகி விட்டது. பாலகிருஷ்ணன், கம்யூனிஸ்டு இயக்க கொள்கை, சித்தாந்தத்துக்கு ஒரு கரும்புள்ளி. தமிழக பா.ஜ.,விற்கு தேவை ஒரே ஒரு தேர்தல். 25 சதவீத ஓட்டு பங்கை தாண்டி விட்டது என காட்டிவிட்டால், தமிழகத்தின் அரசியல் தலைகீழாக மாறிவிடும். மிக துாய்மையான அரசியல் கட்சியாக பா.ஜ., இருப்பதால், பா.ஜ., மீது வெறுப்பு இருக்கத்தானே செய்யும். நான் முழுநேர அரசியல்வாதி கிடையாது. எதுக்கு முழுநேர அரசியல்வாதி? ஊழல் செய்வதற்கா? இப்போதும் நான் விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன். என் முதல் பணி விவசாயம். இரண்டு ஆண்டுகளாக என்னை கல்லெடுத்து அடித்துக் கொண்டிருக்கிறீர்கள். அது தான் என் வளர்ச்சிக்கு காரணம். என்னை நான் மாற்றிக் கொண்டால், எல்லா அரசியல்வாதிகளை போல மாறி விடுவேன். நாட்டில் நிறைய இடங்களில் வெற்றி பெறுவோம். பாத யாத்திரையின் போது வந்த புகார்களில் அதிகம் இருப்பது, அரசின் மீதான ஊழல். இவ்வாறு அவர் கூறினார். தலைவர் பதவி வெங்காயம் போன்றது மாநில தலைவருக்கு போட்டா போட்டி இருந்தால் எடுத்துக் கொள்ளட்டும். தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது. உரித்து பார்த்தால் ஒன்றும் இருக்காது. பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. எனது பதவியை விட்டு விட்டு வந்தவன். எனக்கென்று ஒரு தனி வாழ்க்கை இருக்கிறது; அந்த குட்டி உலகத்தில் வாழ்கிறேன். அதில் அரசியல் இருக்கிறது, என்றார் அண்ணாமலை.