பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை : பழனிசாமி திட்டவட்டம்
5 ஐப்பசி 2023 வியாழன் 05:30 | பார்வைகள் : 3451
பா.ஜ.,வுடன் இனி கூட்டணி இல்லை என்பதை, அ.தி.மு.க., தலைமை மீண்டும் அறிவித்துள்ளது. கட்சியின் இரண்டு கோடி தொண்டர்களின் முடிவுப்படி, அந்த கூட்டணியில் இருந்து விலகியுள்ளதாக அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், இடைப்பாடியில் நேற்று பழனிசாமி அளித்த பேட்டி:
கடந்த மாதம் 25ல் மாநில நிர்வாகிகள், எம்.பி., - எம்.எல்.ஏ., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், இரண்டு கோடி தொண்டர்களின் கருத்தாக, பா.ஜ., கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அப்படி இருக்கும்போது, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் துரைசாமி, கூட்டணி குறித்து பேச்சு நடப்பதாக அறிக்கை வெளியிட்டது குறித்து, அவரிடம் தான் கேட்க வேண்டும். எங்கள் நிலைப்பாட்டை விளக்கிஉள்ளோம்.
இந்த கூட்டணி முறிந்ததால், தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுகள் சிதறுமா என்றால், அது வாக்காளர்களின் கையில் தான் உள்ளது.
கோரிக்கை
கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வாங்கிய ஓட்டுகளை கணக்கிடும்போது, தற்போதைய ஏழு எம்.பி., தொகுதிகளில், அதிக ஓட்டுகள் பெற்றுள்ளோம்; மூன்று தொகுதிகளில் குறைந்த ஓட்டுகள் தான் வித்தியாசம்; 50,000 ஓட்டுகளுக்கு குறைவாக, 10 இடங்கள்; லட்சத்துக்கும் குறைவான ஓட்டுகளில், ஏழு இடங்களில் தோல்வி அடைந்தோம்.
அதனால், வரும் லோக்சபா தேர்தலில், புதுச்சேரி உட்பட, 40 இடங்களிலும் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்.
இரண்டரை ஆண்டுகளாக, தமிழக மக்களை மோசடி செய்யும், விடியா தி.மு.க., ஆட்சி நடந்து வருகிறது. தேர்தல் நேரத்தில் ஸ்டாலின், 520 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், 10 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், 95 சதவீதம் நிறைவேற்றியுள்ளதாக பொய் பேசி வருகிறார்.
தி.மு.க., ஆட்சியில் மின் கட்டணம், 52 சதவீதம், சொத்து வரி, 150 சதவீதம், அத்தியாவசிய பொருட்களின் விலை, 40 சதவீதம் உயர்ந்துள்ளன. இதனால், அன்றாட வாழ்க்கை வாழ முடியாமல், மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஜெயராமன் உள்ளிட்ட, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், கோவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், தென்னை விவசாயிகள் நலன் கருதி கோரிக்கை வைக்க சென்றனர்.
தென்னை விவசாயிகளின் பிரதிநிதியாக, அதை தீர்ப்பதற்கு, அவர்களை அணுகியுள்ளனர்.
தி.மு.க., அமைச்சர்கள் டில்லி சென்று, மத்திய அமைச்சர்களை பார்ப்பதில்லையா; அப்போது, தி.மு.க., - பா.ஜ., கூட்டணி என்றாகி விடுமா?
அதனால் பொய் செய்திகளை பரப்பக்கூடாது. 'இண்டியா' கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி, மத்திய பிரதேசத்தில் தனியாக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, கம்யூனிஸ்ட் இடையே உடன்பாடு இல்லை. கேரளாவில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் எதிரெதிராக உள்ளன.
கண்டுகொள்ளவில்லை
டில்லியிலும் அதேபோல் தான். இப்படி, இண்டியா கூட்டணியில் முரண்பாடான நிலை உள்ளது; இன்னும் முழு வடிவம் பெறவில்லை.
சேலம், மேட்டூர் அணையில், மூன்று நாட்கள் மட்டும் தண்ணீர் இருக்கும். முதல்வர், 'டெல்டாக்காரன்' எனக் கூறிக்கொள்கிறார். ஆனால், விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை. டெல்டா பகுதிகளில், 5 லட்சம் ஏக்கர் நிலத்தில், குறுவை சாகுபடி செய்துள்ளனர்; அதில், 3.50 லட்சம் ஏக்கரில் பயிர்கள் கருகி விட்டன.
உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி, ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய தண்ணீரை கேட்காமல், முதல்வர் ஸ்டாலின், கும்பகர்ணனை போல் துாங்குகிறார். இண்டியா கூட்டணியில் சேர்வதற்கு முன்பே, காங்கிரசுக்கு, டில்லி முதல்வர் கெஜ்ரிவால் நிபந்தனை விதித்து, அதை ஏற்ற பின்னரே சேர்ந்தார்.
ஆனால் கர்நாடகாவுக்கு ஸ்டாலின் சென்றபோது, அந்த கூட்டத்தில் சோனியா, ராகுல் பங்கேற்ற நிலையில், 'தண்ணீர் வேண்டும்' என கோரிக்கை வைத்திருக்க வேண்டும்; வாய்ப்பை நழுவ விட்டார்.
கர்நாடகாவில், கே.ஆர்.எஸ்., அணையில், 100 அடி தண்ணீர் உள்ளது. கபினி அணை, 96 சதவீதம் நிரம்பியுள்ளது; ஆனாலும் தண்ணீர் தரவில்லை. ஒரு விவசாயி, கருகிய பயிர்களை அழிக்கும்போது இறந்து விட்டார். அதை முதல்வர் கண்டுகொள்ளவில்லை.
கற்பனை
பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகியதால், பழிவாங்கும் நடவடிக்கை இருக்குமா, சின்னத்தை முடக்குவரா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. உச்ச நீதிமன்ற தீர்ப்பு, தேர்தல் ஆணைய உத்தரவுப்படி சின்னத்தை பெற்றுள்ளோம்.
மேலும், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கும், எங்களுக்கும் கருத்து வேறுபாடு இல்லை. அண்ணாமலை, எங்கள் தொண்டர்களின் மனதை காயப்படுத்தி விட்டார். அதனால், இரண்டு கோடி தொண்டர்களின் முடிவுப்படி, கூட்டணியில் இருந்து விலகினோம்.அதிக தொகுதிகள் கேட்டனர்; அண்ணாமலையை மாற்றச்சொன்னேன் என்பதெல்லாம், உங்கள் கற்பனை. இவ்வாறு அவர் கூறினார்.