Paristamil Navigation Paristamil advert login

பா.ஜ., கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேற காரணம் இது தான்?...

பா.ஜ., கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேற  காரணம் இது தான்?...

5 ஐப்பசி 2023 வியாழன் 10:36 | பார்வைகள் : 3141


பா.ஜ., கூட்டணியில் இருந்து, அ.தி.மு.க., விலகுவதற்கு, கருத்துக் கணிப்பு முடிவும் முக்கிய காரணம் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரம் கூறியதாவது:

லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., 30 தொகுதிகளில் போட்டியிட விரும்பியது. பா.ஜ.,வுக்கு 10 தொகுதிகளை ஒதுக்க, பழனிசாமி முடிவு செய்தார். 

டில்லியில், மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தபோது, கூடுதலாக இரண்டு தொகுதிகள் கேட்கப்பட்டு, உடன்பாடு ஏற்பட இருந்தது. அதை தடுத்து நிறுத்தியவர், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை.

'பன்னீர்செல்வம் அணி, தினகரனின் அ.ம.மு.க., இல்லாமல், 13 தொகுதிகளில் நமக்கு வெற்றி கிடைக்காது. 

எனவே, பா.ம.க., - தே.மு.தி.க., போன்ற கட்சிகளைச் சேர்த்து, மெகா கூட்டணி அமைக்க நமக்கு 25 தொகுதிகள் வேண்டும்' என, அமித் ஷாவிடம் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

அதற்காக, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் குழு தயாரித்து கொடுத்த புள்ளிவிபரங்களையும் அளித்து விளக்கிஉள்ளார். 

குறிப்பாக, 'பன்னீர்செல்வம், தினகரன் இல்லாமல், அ.தி.மு.க.,வுடன் மட்டும் கூட்டணி அமைத்தால், 20 சதவீத ஓட்டுகளுக்கு மேல் கிடைக்காது. 


அதே சமயம், மெகா கூட்டணி அமைத்தால், தி.மு.க., அரசு மீதான அதிருப்தி, பிரதமர் மோடிக்கான ஆதரவு வாயிலாக, 30 முதல் 35 சதவீத ஓட்டுகளை பெறலாம்' என்ற கணக்கையும் கொடுத்துள்ளார். 

எனக்கு டிசம்பர் மாதம் வரை அவகாசம் தாருங்கள்; கட்சியை பலப்படுத்தி, மெகா கூட்டணி அமைத்து, கணிசமான தொகுதி களில் வெற்றி பெற்று தருகிறேன். 

லோக்சபா தேர்தலில் பா.ஜ., ஓட்டு வங்கியை கணிசமாக அதிகரிக்க வைக்கிறேன். வரும் 2026 சட்டசபை தேர்தலில், எதிர்க்கட்சியாக பா.ஜ.,வை உருவெடுக்க வைக்கிறேன்' என்றெல்லாம் அண்ணாமலை கூறியுள்ளார். 

அதன் பின் தான், அ.தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு பேச்சு நடத்துவதில், பா.ஜ., ஆர்வம் காட்டவில்லை. 

இதற்கிடையில், ஆங்கில 'டிவி' சேனல் நடத்திய கருத்துக் கணிப்பில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்காமல், அ.தி.மு.க., தனித்து போட்டியிடுமானால், ஐந்து தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டது. 

தனியார் சர்வே நிறுவனம் கொடுத்த அறிக்கையில், கரூர், பொள்ளாச்சி, கோவை, ஈரோடு, வேலுார், சேலம், கிருஷ்ணகிரி, தென்சென்னை, திருவள்ளூர் ஆகிய தொகுதிகள், அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பா.ஜ.,வின் தனி கூட்டணி திட்டம், ஒன்பது தொகுதிகளில் தனித்து வெற்றி போன்ற கருத்துகளை வைத்து தான், பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகும் முடிவை பழனிசாமி எடுத்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்