தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன் இடங்களில். சோதனை நடத்தினர்...
9 ஐப்பசி 2023 திங்கள் 15:50 | பார்வைகள் : 3922
தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கல்லுாரிகள், மருத்துவமனைகள்,மது ஆலை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித் துறை அதிகாரிகள்,நேற்று திடீர் சோதனை நடத்தினர். கணக்கில் காட்டப்படாத வருமானம் மற்றும் சொத்துக்களுக்கான ஆதாரங்களை, சல்லடை போட்டு தேடினர்.
தி.மு.க.,வை சேர்ந்த, அரக்கோணம் தொகுதி எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமாக பல நிறுவனங்கள் உள்ளன. மதுபான ஆலை, கல்வி நிறுவனங்கள், நட்சத்திர ஹோட்டல், மருத்துவமனை, மின் உற்பத்தி நிறுவனங்கள், மருந்து பொருள் தயாரிப்பு, ஸ்டீல் தயாரிப்பு நிறுவனங்கள், துறைமுக பணிகள் மற்றும் நகை தயாரிப்பு போன்ற பல தொழில்கள் உள்ளன.
அவரது நிறுவனங்களில் வரி ஏய்ப்பு நடப்பதாக, வருமான வரித் துறைக்கு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான, 40க்கும் மேற்பட்ட இடங்களில், நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டு உள்ளது.
சோதனை நடந்த இடங்கள் விபரம்:
* சென்னை, அடையாறு, இந்திரா நகரில் உள்ள ஜெகத்ரட்சகன் வீடு
* பட்டாபிராமில் உள்ள பாலாஜி மருத்துவ கல்லுாரி பணியாளரின் வீடு
* பள்ளிக்கரணை, குரோம்பேட்டையில் உள்ள பாலாஜி பல் மருத்துவ கல்லுாரிகள்
* தி.நகர், திலக் தெருவில் உள்ள அக்கார்டு குழும அலுவலகம்
* ஜி.என்.செட்டி சாலையில் உள்ள அக்கார்டு ஹோட்டல்
* தி.நகரிலுள்ள ஆழ்வார்கள் ஆராய்ச்சி மையம்
* பள்ளிக்கரணை நாராயணபுரத்தில் உள்ள ஜெருசலேம் இன்ஜினியரிங் கல்லுாரி
* தாகூர் குழும கல்லுாரிகள்
* வாலாஜாபாத் அருகே உள்ள எலைட் டிஸ்லரிஸ், அக்கார்ட் டிஸ்லரிஸ் மதுபான ஆலைகள்
* குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனை
* சேலையூரில் உள்ள பாரத் கல்லுாரி
* காஞ்சிபுரம், வள்ளிமேட் டில் உள்ள அக்கார்டு பீர் தொழிற்சாலை
* வாலாஜாபாத் ராஜவீதியில் இருக்கும் ஜெகத்ரட்சகனின் மேலாளர் குப்பன் வீடு
* ஜெகத்ரட்சகனின் மைத்துனரும், தாம்பரம் துணை மேயருமான காமராஜ் வீடு
மாமல்லபுரத்தில் உள்ள, 'கால்டன் சமுத்ரா' விடுதி-
புதுச்சேரி, வில்லியனுார் அடுத்த ஊசுட்டேரி அகரத்தில் உள்ள லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லுாரி
அதன் முக்கிய நிர்வாகி அன்பு வீடு.
இவை உள்ளிட்ட, 40க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித் துறை அதிகாரிகள், பல்வேறு குழுக்களாக பிரிந்து, நேற்று சல்லடை போட்டு சோதனை நடத்தினர். முன்னதாக போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டு, சோதனை நடந்த இடங்களில், பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சோதனையில், ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வணிக நிறுவனங்களின் வங்கி கணக்கு, வருமான வரி கணக்கு விபரங்கள், கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை, கட்டண வசூல் மற்றும் மாணவர் சேர்க்கைக்கு பெறப்பட்ட நன்கொடை விபரங்கள், மதுபான உற்பத்தி, விற்பனை உள்ளிட்ட கணக்கு விபரங்களை, அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.
மேலும், ஜெகத்ரட்சகன், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த ஆவணங்களையும், வருமான வரித் துறையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது. அலுவலக கணினி, 'ஹார்ட் டிஸ்க், பென்டிரைவ்' போன்ற 'டிஜிட்டல்' ஆவணங்களையும், அதிகாரிகள் எடுத்துள்ளனர்.
ஏற்கனவே, ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில், 2016ம் ஆண்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி, கணக்கில் வராத ரொக்கப்பணம், கோப்புகள் மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
அதன்பின், 2020ம் ஆண்டில் அமலாக்கத் துறை சோதனையின்போது, விதிமுறைகளை மீறி வெளிநாடுகளில் நிதி முதலீடு செய்ததாக, ஜெகத்ரட்சகன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது, 89.19 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியதாக, அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது, மீண்டும் வருமான வரித் துறை சோதனை நடந்துள்ளது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, தற்போது மாணவர் சேர்க்கை நடக்கும் நிலையில், ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில், வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
சவிதா பல்கலையிலும் சோதனை
சென்னை மற்றும் ஈரோட்டில் உள்ள, சவிதா மருத்துவ கல்வி நிறுவனங்களிலும், அதன் உரிமையாளருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களிலும், நேற்று வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
சென்னையில் செயல்படும் சவிதா நிகர்நிலை பல்கலையின் உரிமையாளர் டாக்டர் வீரய்யன். ஈரோட்டை சேர்ந்த இவருக்கு, அங்குள்ள சம்பத் நகரில் ஒரு வீடும், வீட்டின் கீழ் தளத்தில், 'எம்.எம்.இந்தியா மெடிக்கல் சர்வீஸ்' நிறுவனமும் இயங்குகிறது. மேலும், பல்வேறு இடங்களில் இவருக்கு சொந்தமான கட்டடங்கள் உள்ளன. அந்த இடங்களில், நேற்று வருமான வரித்துறை சோதனை நடந்தது.
சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சவிதா மருத்துவ கல்லுாரி, சவிதா பல் மருத்துவ கல்லுாரி மற்றும் பல்நோக்கு மருத்துவமனைகளிலும், வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாகவும், முறையாக கணக்குகளை தாக்கல் செய்யாத புகாரிலும், இந்த சோதனை நடந்துள்ளது.