உலகக்கோப்பை முதல் போட்டியிலே அரிய சாதனை படைத்த இங்கிலாந்து அணி
6 ஐப்பசி 2023 வெள்ளி 09:07 | பார்வைகள் : 2406
நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி அரிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று ஆரம்பமாகியுள்ளது.
அகமதாபாத் மைதானத்தில் தொடங்கிய முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன.
நாணய சுழற்சியில் வென்று நியூசிலாந்து பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் மலான் 14 ஓட்டங்களிலும், பேர்ஸ்டோவ் 33 ஓட்டங்களிலும் அவுட் ஆகினர்.
பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஹரி புரூக் 25 ஓட்டங்களிலும், பட்லர் 43 ஓட்டங்கள் விளாசியும் வெளியேற இங்கிலாந்து விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தது.
இதற்கிடையில் 37வது அரைசதம் விளாசிய ஜோ ரூட், 86 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 77 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பிலிப்ஸ் ஓவரில் போல்டு ஆனார்.
இதனைத் தொடர்ந்து வந்த வோக்ஸ் (11), சாம் கரண் (14) தங்கள் பங்குக்கு ஓட்டங்கள் எடுக்க, அடில் ரஷித் 15 ஓட்டங்களும், மார்க் வுட் 13 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 282 ஓட்டங்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளும், சான்ட்னர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இங்கிலாந்து அணியில் துடுப்பாடிய 11 வீரர்களும் இரட்டை இலக்க ஓட்டங்கள் எடுத்தனர். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அரிய சாதனையாகும்.
இதுவரை 4,658 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. ஆனால், இங்கிலாந்து மட்டும் தான் தற்போது முதல்முறையாக இந்த சாதனையை செய்துள்ளது.