அண்ணாமலை விவகாரத்தில் குழப்பம் தீர்ந்தது...
4 ஐப்பசி 2023 புதன் 18:44 | பார்வைகள் : 3908
டில்லியில் பா.ஜ., தேசிய தலைவர்களை சந்தித்துப் பேசிய பின், அண்ணாமலை விவகாரத்தில் ஏற்பட்ட குழப்பம் தீர்ந்துள்ளது. கூட்டணி பற்றி கவலை இன்றி, கட்சிப் பணியை தொடருங்கள் என, மேலிடம் பச்சைக்கொடி காட்டியதை தொடர்ந்து, தள்ளிவைக்கப்பட்டு இருந்த, தமிழக பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம், சென்னையில் நாளை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகுவதாக, அ.தி.மு.க., அறிவித்துள்ள நிலையில், கடந்த 1ம் தேதி, கோவையில் இருந்து அண்ணாமலை, டில்லி சென்றார். இரு நாட்கள் தங்கியிருந்து, தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், தேசிய அமைப்பு பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷ், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்தார்.
தோற்றம் அண்ணாமலை செயல்பாடுகளால் தான், கூட்டணியை விட்டு அ.தி.மு.க., விலகியதோ என்ற சந்தேகம், பா.ஜ., தேசிய தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு விளக்கம் கொடுப்பதுடன், தலைமை முடிவையும் தெரிந்து கொள்ள விரும்பியே அண்ணாமலை டில்லி சென்றார். <br><br>டில்லி சந்திப்பில், தேசிய தலைவர்களிடம் அண்ணாமலை கூறியுள்ளதாவது: தன்மானத்தை விட்டு, யாரிடமும், எதற்காகவும் இறங்கி போகாத ஒருவரை தான் தமிழகம் எதிர்பார்க்கிறது. மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படுகிறேன். என் செயல்பாட்டை மக்கள் ரசிக்கின்றனர். கூட்டணி விஷயத்தில் சில நெருடல்களை தாங்களே ஏற்படுத்தி விட்டு, அ.தி.மு.க.,வினர் அதற்கு காரணம் தேடினர். அண்ணாதுரை குறித்த என் பேச்சை காரணம் காட்டி, அதனால் கூட்டணியில் இருந்து விலகியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். பா.ஜ.,வுடன் கூட்டணி தேவையில்லை என முடிவு எடுத்து விட்டு, அதற்கேற்ப காரணம் தேடியவர்கள், அண்ணாதுரை விஷயத்தை பெரிதுபடுத்தி விட்டனர். தமிழகத்தில் மற்ற கட்சிகளை விட, பா.ஜ.,வை மேலான நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பது மட்டுமே என் இலக்கு. முன்பை விட, தமிழகத்தில் பா.ஜ., வளர்ந்துள்ளது. அதற்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட 'சர்வே'க்களே சாட்சி. கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும், பா.ஜ.,வுக்கு லோக்சபா தேர்தல் வாயிலாக மரியாதையும், முக்கியத்துவமும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக உழைக்கிறேன்; அதை நிச்சயம் ஏற்படுத்துவேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார். அண்ணாமலையிடம், தேசிய தலைவர்கள் கூறியுள்ளதாவது: தமிழக அரசியல் களம் வித்தியாசமானது. அதில் பா.ஜ.,வுக்கு என, தனி முக்கியத்துவம் ஏற்பட்டு இருப்பதை, நாங்களும் உணர்ந்திருக்கிறோம். இந்த சூழலில் தமிழக பா.ஜ., கட்டமைப்பில் மாற்றம் தேவையில்லாதது; அப்படியொரு யோசனை இல்லை. தேடி வருவர் அதேபோல, உங்கள் பாதயாத்திரை மக்கள் வரவேற்கக் கூடியதாக இருப்பதை அறிந்துள்ளோம். அதனால், கூட்டணி குறித்து நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். இப்போதைக்கு ஒவ்வொருவருக்கும் என்ன பணி கொடுக்கப்பட்டு இருக்கிறதோ, அதை செய்தால் நல்லது. வரும் டிசம்பரில், ஐந்து மாநில தேர்தல்கள் நடக்க உள்ளன; அவற்றில் பா.ஜ., வெற்றி பெறும். அதன்பின், தேசிய அரசியலில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இன்று, கூட்டணி வேண்டாம் என்பவர்கள், நம்மை தேடி வருவர். அந்த சூழலில், எப்படி முடிவெடுப்பது என்பதை, தேசிய தலைமை பார்த்து கொள்ளும். அதுவரை, தமிழக பா.ஜ., தலைவர்கள், கூட்டணி குறித்து கவலைப்பட வேண்டாம். மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தோடு, நீங்கள் உழைக்க வேண்டும். உங்களை போன்ற மாநில தலைவர்களுக்கு, அதில்கூடுதல் பொறுப்பு உண்டு. எனவே, தமிழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, இங்கே விவாதிக்கப்பட்ட விஷயங்களை, அவர்களிடம் எடுத்து கூறி, கூட்டணி பற்றி கவலைப்படாமல், மக்கள் பணிகளை மட்டும் செய்யும்படி கூறுங்கள் இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். அதற்கு பின்னரே, தள்ளி வைக்கப்பட்டிருந்த, தமிழக பா.ஜ., மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், சென்னை, அமைந்தகரையில் உள்ள அய்யாவு மண்டபத்தில், நாளை நடக்க உள்ளதாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. கூட்டணி பற்றிய சிந்தனையே இல்லை! எல்லாம் சுமுகமாக முடிந்துள்ளது. தமிழக பா.ஜ., தன் வழக்கமான பாணியில் பயணத்தை தொடரும். என் பாதயாத்திரை திட்டமிட்டபடி நடக்கும். அரசியலில் இன்னும் வேகமாக செயல்படுவேன். சித்தாந்த அடிப்படையில் என்ன நிலைப்பாட்டில், பா.ஜ., தற்போது செல்கிறதோ, அதே அடிப்படையில் தொடர்ந்து செல்வேன். தமிழக பா.ஜ.,வின் தொடர் செயல்பாடுகள் குறித்த தெளிவான விபரங்களை, நாளை, சென்னையில் நடக்கும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கூறுவேன். கூட்டணி குறித்த சிந்தனை, தற்போது தமிழக பா.ஜ.,வுக்கு இல்லை.-அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவர் சிவாஜி வீட்டில் மண் எடுத்த பா.ஜ.,மத்திய அரசு, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை கவுரவிக்கும் வகையில், 'என் மண் என் தேசம்' என்ற இயக்கத்தை துவக்கியுள்ளது. இதற்காக, நாட்டின் பல பகுதிகளில் இருந்து கலசங்களில் மண் எடுக்கப்படுகிறது.அந்த மண், கலசங்கங்களில் நிரப்பப்பட்டு, டில்லிக்கு அனுப்பி, அங்கு அமிர்த பூங்கா வனம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, சென்னை, தி.நகரில் உள்ள நடிகர் சிவாஜி வீட்டில் இருந்து, பா.ஜ., இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, கரு.நாகராஜன் உள்ளிட்டோர் மண் எடுத்தனர். சிவாஜி மகன் ராம்குமார் பங்கேற்றார். சென்னையில் சுதாகர் ரெட்டி ஆலோசனை சென்னை, தி.நகரில் உள்ள கமலாலயத்தில், தமிழக பா.ஜ., பெரும்கோட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. அதில், மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில அமைப்பு பொதுச் செயலர் கேசவவிநாயகன், மாநில துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின், சுதாகர் ரெட்டி அளித்த பேட்டி:'என் மண்; என் தேசம்' என்ற இயக்கத்திற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, மண் எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, கிராமங்களில் அந்த பணி முடிந்தது. தற்போது, வட்ட அளவில் மண் எடுக்கும் பணி துவங்கியுள்ளது. 'பூத்' கமிட்டி அமைக்கும் பணியில் கவனம் செலுத்தப்படுகிறது. மத்திய அரசு, தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. இதற்காக, அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. வீடு, கிளை, வார்டு தோறும் மக்களிடம் தாமரை சின்னம் கொண்டு செல்லப்படும். இவ்வாறு அவர் கூறினார். பாதயாத்திரை 6ல் துவக்கம்<br><br>தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.முதலாவது, இரண்டாவது கட்டம் முடிந்துள்ளது. மூன்றாம் கட்ட யாத்திரையை, கோவை, மேட்டுப்பாளையத்தில், இன்று துவக்க இருந்தார். மேலிட தலைவர்களை சந்திக்க, டில்லி சென்றதால், தள்ளிப் போடப்பட்டது.தற்போது வரும், 6ம் தேதி மேட்டுப்பாளையத்தில் துவங்கி, 31ம் தேதி, தஞ்சையில் நிறைவு செய்ய உள்ளார்.