பாப்கார்ன் சிக்கன்
7 ஐப்பசி 2023 சனி 15:26 | பார்வைகள் : 2715
பாப்கார்ன் சிக்கன் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பார்கள். இதனை மிகவும் சுலபமான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யலாம். மைதா மாவு, சோள மாவு, எலும்பில்லாத சிக்கன் ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இது மயோனைஸ், தக்காளி சாஸ், சில்லி சாஸ், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். சுவையான பாப்கான் சிக்கனை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்
சிக்கன் ஊற வைக்கத் தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் – 400g
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – ½ தேக்கரண்டி
சில்லி சாஸ் – ½ தேக்கரண்டி
பூண்டுப்பொடி (Garlic Powder) – ½ தேக்கரண்டி
இஞ்சி பொடி (Ground Ginger) – ½ தேக்கரண்டி
புளிப்புள்ள மோர் – ¼ கப்
முட்டை – 1
மைதா – 1 கப் – 140g
சோள மாவு – ½ கப் – 80g
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த்தூள் – ½ தேக்கரண்டி
சமையல் எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தோல், எலும்பில்லாத சிக்கனை சுத்தம் செய்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் ½ தேக்கரண்டி, சில்லி சாஸ் ½ தேக்கரண்டி, பூண்டுப்பொடி (Garlic Powder) ½ தேக்கரண்டி, இஞ்சி பொடி (Ground Ginger) ½ தேக்கரண்டி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
அதனுடன் லேசான புளிப்பு உள்ள மோர் ¼ கப் சேர்த்துக் கொள்ளவும்.
இவற்றை நன்றாக கலந்த பின்னர் மூடி வைத்து 1 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில்/தட்டில், 1 கப் மைதா மாவு சேர்த்துக் கொள்ளவும்.
அதனுடன் ½ கப் சோள மாவு சேர்த்துக் கொள்ளவும்.
மேல் மாவிற்கு தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்,.
½ தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும்.
1 மணி நேரத்திற்கு பிறகு, சிக்கனில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி கலந்து கொள்ளவும்.
சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து கலந்து வைத்துள்ள மாவில் போட்டு பிரட்டவும்.
எல்லா சிக்கன் துண்டுகளையும் இதேபோல பிரட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
சிக்கன் துண்டுகளை எடுத்த பின்னர் மீதமுள்ள மசாலாவில் சிறிதளவு ஐஸ் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
சிக்கன் துண்டுகளை தண்ணீரில் 2 – 3 வினாடிகள் வைத்து மீண்டும் அதே மாவில் பிரட்டி எடுத்து வைக்கவும் .
பின்னர் மிதமான தீயைக் காட்டிலும் சற்றுக் கூடுதலான தீயில் எண்ணையை சூடாக்கி பின்னர் சிக்கன் துண்டுகளை சேர்த்து பொரிக்கவும்.
அவ்வப்போது திருப்பி போடவும், பொன்னிறமானதும் எண்ணெயை வடித்து தனியே எடுக்கவும்.
சுவையான பாப்கார்ன் சிக்கன் தயார்.