பிரதமர் மோடி மற்றும் கிரிக்கெட் மைதானத்துக்கு... வெடிகுண்டு மிரட்டல்!
9 ஐப்பசி 2023 திங்கள் 15:48 | பார்வைகள் : 3612
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குஜராத் மாநிலம் ஆமதாபாதில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 'இ - மெயில்' எனப்படும் மின்னஞ்சலில் வந்த இந்த மிரட்டலில், சிறையில் உள்ள பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயை விடுவிக்கும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.
நம் நாட்டில், உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடர், கடந்த 5ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. சென்னை, மும்பை, புதுடில்லி, கோல்கட்டா, ஹைதராபாத், ஆமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் போட்டிகள் நடக்கின்றன.
இந்நிலையில், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு, நேற்று முன்தினம் இ - மெயில் ஒன்று வந்தது; அதில் குறிப்பிடப்பட்டுஇருந்ததாவது:
எங்களுக்கு, 500 கோடி ரூபாய் வேண்டும். மேலும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள எங்கள் தலைவர் லாரன்ஸ் பிஷ்னோயை விடுதலை செய்ய வேண்டும்.
இல்லையெனில், பிரதமர் நரேந்திர மோடியுடன் சேர்த்து, ஆமதாபாதில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தையும் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம். உங்களால் இதை தடுக்க முடியாது. எங்களிடம் பேச விரும்பினால், இந்த இ - மெயில் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கொலை, கொள்ளை, சதித் திட்டம் உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய், தலைநகர் புதுடில்லியில் உள்ள மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2022 மே மாதம், பஞ்சாபைச் சேர்ந்த பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கிலும், இவர் முக்கிய குற்றவாளி ஆவார்.
இது குறித்து, என்.ஐ.ஏ., வட்டாரங்கள் கூறியதாவது:
என்.ஐ.ஏ.,வுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல், ஐரோப்பாவில் இருந்து வந்துள்ளது. இது, 'பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் ஆள்' என்ற பெயரில் வந்துள்ளது. இந்த இ - மெயில், பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
இதன், 'டொமைன்' எனப்படும் இணைய முகவரி, சுவிட்சர்லாந்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதை அடுத்து, இது தொடர்பான விபரங்களை, அந்நாட்டு அரசிடம் கேட்டுள்ளோம்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
இந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, மும்பை, ஆமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடக்கவுள்ள மைதானங்களை சுற்றி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முழு நேர கண்காணிப்பில் ஈடுபடும்படி, போலீசாருக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வரும் 14ல், ஆமதாபாதில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி நடக்க உள்ளது.
அப்போது, அந்த மைதானத்தில் தாக்குதல் நடத்துவோம் என மிரட்டல் விடுத்த காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மீது, செப்., 29ல் போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.