Paristamil Navigation Paristamil advert login

லோக்சபா தேர்தலை சந்திக்க பா.ஜ., தயார்! விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வியூகம்

லோக்சபா தேர்தலை சந்திக்க பா.ஜ.,  தயார்!  விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வியூகம்

9 ஐப்பசி 2023 திங்கள் 15:47 | பார்வைகள் : 3693


பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்ததையொட்டி, பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, 'தேங்க் யூ மோடி ஜி' என்ற முழக்கத்துடன், விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில், பா.ஜ., இறங்கியுள்ளது.

அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்த லுக்கான நடவடிக்கைகளில், பா.ஜ., மேலிடம் தீவிரமாக இறங்கியுள்ளது.

இதன் ஒரு கட்டமாக, கட்சியின் முக்கியமான பிரிவுகளின் நிர்வாகிகளுக்கு புதுப்புது யோசனைகளுடன், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதன்படி, பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவு, ஏற்கனவே, 'ஸ்நேஹ் சம்வாத்' எனப்படும் 'அன்போடு உரையாடுவோம்'  என்ற பெயரில் பல்வேறு கூட்டங்களை நடத்த, திட்டமிடப்பட்டுள்ளது.

இது தவிர, 'மோடியின் நண்பர்களாக கூடுவோம்' என்ற கருத்தின் அடிப்படையில், 'மோடி மித்ர சம்மேளன்' கூட்டங்களையும் நடத்தும் பணிகள் துவங்கியுள்ளன.

'தேங்க்யூ மோடி ஜி'

பா.ஜ.,வில் உறுப்பினராக இல்லாத, அந்தந்த பகுதியில் உள்ள டாக்டர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள் என சமூகத்தின் பலதரப்பட்ட துறைகளிலும் சிறந்து விளங்குவோரை அழைத்து, அவர்களுடன் கலந்துரையாடும் திட்டம், இது.

ஒவ்வொரு லோக்சபா தொகுதியிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த கூட்டங்களை தற்போது மேலும் விரிவுபடுத்தி, ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் நடத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

இதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. இந்நிலையில், தற்போது 'தேங்க்யூ மோடி ஜி' என்ற முழக்கத்துடன், விழிப்புணர்வு பிரசாரத்தையும் இந்த சிறுபான்மையினர் பிரிவு கையில் எடுத்துள்ளது.

இந்த அணியிலுள்ள பெண்கள்தான் முழுக்க இந்த பிரசாரத்தை மேற்கொள்ளப்போகின்றனர்.

தங்களுக்கு பெரிதும் தொல்லையாக இருந்து வந்த 'முத்தலாக்' ஒழிக்கப்பட்டது, புனித பயணத்திற்கு செல்லும் உரிமை தரப்பட்டது என பல விஷயங்களை மையமாக வைத்து, இவர்கள்  பிரசாரம் செய்யப் போகின்றனர்.

பெண்களின் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கு, மேலும் ஒரு படிக்கல்லாக பார்லி., மற்றும் சட்டசபைகளில் அவர்களுக்கு இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றியுள்ளதற்காக, பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதும் இந்த பிரசாரத்தின் மையக் கருவாக வைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தீவிரம்

இதற்காக நாடு முழுதும் உள்ள இந்த பிரிவில் அங்கம் வகிக்கும் பெண்கள் அனைவருமே, பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டியும், அவருக்கு நன்றி தெரிவித்தும், கடிதங்களை அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த அக்டோபர் மாதம் முழுதும் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை 'தேங்க்யூ மோடி ஜி' என்ற முழக்கத்துடன் கடிதம் அனுப்பும்படியும், அந்தந்த பகுதியில் உள்ள கட்சி சாராத பெண்களிடமும், இந்த பிரசாரத்தை தீவிரமாக மேற்கொள்ளும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது என, பா.ஜ., மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்