இலங்கையை அச்சுறுத்தும் சீரற்ற வானிலை: இதுவரை 7 பேர் பலி!
8 ஐப்பசி 2023 ஞாயிறு 10:59 | பார்வைகள் : 3778
தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் 5 பேர் பஸ் மீது மரம் விழுந்தும், காலி, அம்பாறை மாவட்டங்களில் இயற்கை அனர்த்தங்களில் சிக்கி இருவரும் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மாத்தறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்று (08) காலை மாத்தறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலுக்கு மாத்தறை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டதாக அத தெரண செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதன்போது காலி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பில் விளக்கமளித்த மாவட்ட செயலாளர் சாந்த வீரசிங்க,
“செப்டெம்பர் 26ஆம் திகதி முதல் காலி மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையினால் 3500 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 8,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. 250 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. தற்போது பத்தேகம பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.அதன்படி, அந்த பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த நடவடிக்கைகளில் பொலிஸார் மற்றும் நிவாரண குழுவினர் ஈடுபட்டுள்ளனர். தற்போது, பாதுகாப்பு மையம் ஒன்று இயங்கி வரும் நிலையில் அதில் 271 பேர் உள்ளனர். அவர்களுக்கு உலர் உணவு மற்றும் சமைத்த உணவு உள்ளிட்ட அனைத்து நிவாரணங்களும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் சேகரிக்கப்பட்டு வருகிறது” என்றார்
இதேவேளை, பல கங்கைகளின் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வர தெரிவித்தார்.
“நில்வலா ஆற்றுப் படுகையின் தாழ்வான பகுதிகளில் கணிசமான அளவு வெள்ளப்பெருக்கு இன்று சிறிதளவு அதிகரித்து வருகின்றது என்றே கூற வேண்டும். அணைக்கட்டு நிரம்பி வழிய ஆரம்பித்துள்ளது. இவ்வாறு திறந்துவிடப்படும் நீர் கொடகம, சுல்தானகொட, பலடுவ, ஹித்தெட்டிய மற்றும் சில பகுதிகளை சென்றடைகிறது. கிங்கங்கை நாகொட, போப்பொத்தல மற்றும் பத்தேகம பிரதேச செயலகப் பிரிவுகளில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை இன்றும் நீடிக்கலாம். அத்தனகலுஓயா குளத்தின் தாழ்வான பகுதிகளில் சில பகுதிகள் சிறிதளவு பாதிக்கப்பட்டுள்ளது. அதே நிலைமை இன்றும் நீடிக்கலாம். களுகங்கையின் குடா ஓயா துணைப் படுகையில் வெள்ள நிலைமை சிறிதளவு குறைந்து வருகிறது” என்றார்.
இதேவேளை, கடும் மழை காரணமாக துவாவத்தை வாய்க்கால் நிரம்பி வழிவதால் களனி, வனசல, கோரக்காவல பிரதேசங்களில் சுமார் 200 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் ஹப்புத்தளை பெரகல வெல்லவாய பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
கீழ் விகாரகல பிரதேசத்தில் இருந்து மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார்.