சிவகுமார் சிறைக்கு செல்லும் காலம் நெருங்குகிறது: குமாரசாமி
9 ஐப்பசி 2023 திங்கள் 11:32 | பார்வைகள் : 3842
துணை முதல்வர் சிவகுமார், திஹார் சிறைக்கு செல்லும் நாட்கள் நெருங்குகிறது, என ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
ராம்நகரில் நேற்று அவர் கூறியதாவது:
பொது இடத்தில், என் தோளில் கை போட்டு இரட்டை காளைகள் என, நயவஞ்சகமாக பேசினர்.
இதை நம்பி, நான் மோசம் போனேன். அதன்பின் என்னை நட்டாற்றில் கைவிட்டுவிட்டு, மாட்டு வண்டியுடன் ஓடிவிட்டார். 2018ல் கூட்டணி அரசு கவிழ்ந்ததற்கு காரணம், சிவகுமார் தானே தவிர, நான் அல்ல.
எனக்கும், ரமேஷ் ஜார்கி ஹோளிக்கும், மனஸ்தாபம் இருந்ததா. பெலகாவி மாவட்ட கூட்டுறவு வங்கி அரசியலுக்கு, நான் பாதிக்கப்பட்டேன்.
சிவகுமார், பெலகாவி அரசியலில், மூக்கை நுழைத்தது ஏன். குமாரண்ணா அரசை காப்பாற்ற, நான் முயற்சித்தேன் என, முதலை கண்ணீர் விட்டார்; உள்ளுக்குள் சதி செய்தார்.
மாநிலத்தில் காங்கிரசின் பாவக்குடம் நிரம்புகிறது. இது போன்ற அரசை, நான் பார்த்தது இல்லை.
காங்கிரசின் உட்கட்சி பூசலால், இந்த அரசு கவிழும். 2024ல் சட்டசபை தேர்தல் நடந்தே தீரும். அதில் அந்த நபர் (சிவகுமார்) வேட்பாளர் ஆவது சந்தேகம். என்ன நடக்கும் என்பது, எனக்கு தெரியும்.
வரும் காலத்தில், அவருடன் நான் சமரசம் செய்யமாட்டேன். ஒருமுறை அவருடன் சேர்ந்து, அரசு அமைத்ததால் ஏற்பட்ட வலியை, இப்போதும் அனுபவிக்கிறேன். ஒரு முறை அவர் திஹார் சிறையை பார்த்து வந்தார். அவர் நிரந்தரமாக அங்கு சென்றாலும் ஆச்சரியப்பட முடியாது. அவர் திஹாருக்கு செல்லும் காலம் நெருங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.