உலகக் கோப்பை போட்டி - சதம் தவறவிட்ட கே.எல் ராகுல்
9 ஐப்பசி 2023 திங்கள் 08:59 | பார்வைகள் : 2462
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 5வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது, இதில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதின.
முதல் பேட்டிங்கில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
சற்று எளிய இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி களமிறங்கினாலும், ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது.
முன்னணி வீரர்களான இஷான் கிஷான், ரோகித் சர்மா, மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் என மூவரும் ஓட்டங்கள் எதுவும் குவிக்காமல் பெவிலியன் திரும்பி அதிர்ச்சியளித்தனர்.
இதனால் இந்திய அணி 2 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஆனால் பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
விராட் கோலி 116 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 85 ஓட்டங்களும், கே.எல் ராகுல் 115 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 97 ஓட்டங்களும் குவித்து இந்திய அணியை வெற்றி பெற செய்தனர்.
இந்நிலையில் ஆட்டநாயகன் விருதை பெற்றுவிட்டு கே.எல் ராகுல் பேசிய போது, சின்ன குளியல் போட்டு வருவதற்குள் களத்தில் இறங்க வேண்டியதாகி விட்டது.
இந்த ஆடுகளத்தில் ஏதோ உள்ளது, இந்த ஆடுகளத்தில் விளையாடுவது என்பது எளிதானது அல்ல, இதில் பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் என இருவருக்கும் ஏதோ உள்ளது.
இது தென்னிந்திய ஆடுகளங்களுக்கான சிறப்பு, அதிலும் குறிப்பாக இது சென்னை ஆடுகளத்தின் சிறப்பு, எனவே சிறிது நேரத்திற்கு டெஸ்ட் போட்டியில் விளையாடுவது போல் விளையாடுவோம் என விராட் கோலி என்னிடம் சொன்னார்.
கடைசி 15 முதல் 20 ஓவர்களில் தான் பனிப்பொழிவு எங்களுக்கு சாதகமாக மாறியது என கே.எல் ராகுல் தெரிவித்தார்.
கடைசி சிக்சர் பற்றிய பேசிய கே.எல் ராகுல், சதமடிப்பதற்கு பவுண்டரி அடிக்க வேண்டும் என்பதே சாத்தியமான ஒன்றாக இருந்தது, ஆனால் கடைசி பந்து என்னை அறியாமலே சிக்சராக அமைந்துவிட்டது.
ஆனால் அதுகுறித்து கவலைப்படவில்லை, அடுத்த போட்டியில் சதம் அடித்து கொள்ள வேண்டியது தான் என தெரிவித்தார்.