நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையில் ஆரம்பமாகும் கப்பல் சேவை
6 ஐப்பசி 2023 வெள்ளி 14:29 | பார்வைகள் : 3721
தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முழுமையான அளவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்று குறித்த இரு துறைமுகங்களுக்கும் இடையிலான கப்பல் பரீட்சார்த்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இதற்காக தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்தை ஆழப்படுத்தி தூர்வாரும் பணிகளை கடந்த மாதம் தமிழக அமைச்சர் எ.வ.வேலு, ஆரம்பித்து வைத்தார்.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் குடியுரிமை பரிசோதனைகள், மருத்துவ பரிசோதனைகள், பயணிகள் கொண்டு வரும் உடைமைகளை பாதுகாப்பாக வைப்பதற்கான வசதிகள் மற்றும் பயணிகளின் பொதிகளை சோதனையிடுதல் என சகல நடவடிக்கைகளுக்குமாக தனித்தனியாக அறைகள் கட்டப்பட்டுள்ளன.
பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பித்த பின்னர் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 2 கப்பல்கள் இலங்கைக்கு பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு கப்பல், நாகப்பட்டினத்திலிருந்து காலை 10 மணிக்கு இலங்கை காங்கேசன்துறை நோக்கி செல்லும் எனவும், எதிர்த்திசையில் இலங்கையிலிருந்து மாலை 5 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகம் நோக்கி கப்பல் புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் கொச்சி துறைமுகத்திலிருந்து நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கப்பலொன்று கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது பயணத்தை ஆரம்பித்தது.
400 கடல் மைல் தூரத்திலுள்ள நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு இந்த கப்பல் நேற்று (05) வந்தடைந்து.
இந்த நிலையில், நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்திற்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சோதனை முறையில் இன்று முன்னெடுக்கப்படும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.