இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையிலான கப்பல் சேவை தாமதம்
10 ஐப்பசி 2023 செவ்வாய் 10:17 | பார்வைகள் : 4165
தமிழகத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான கப்பல் சேவை பிற்போடப்பட்டுள்ளது.
தமிழகம் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இடையிலான கப்பல் சேவை இன்றையதினம் செவ்வாய்க்கிழமை (10) முதல் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கான முதல் முயற்சியாக ஞாயிற்றுக்கிழமை (8) பரீட்சார்த்த பயணத்தை கப்பல் மேற்கொண்டு , காங்கேசன்துறைக்கு வந்து நாகப்பட்டினம் திரும்பியிருந்தது.
இந்நிலையில் குறித்த கப்பல் சேவை செவ்வாய்க்கிழமை இடம்பெறமாட்டாது எனவும் , எதிர்வரும் 12ஆம் திகதியே இடம்பெறும் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, குறித்த பயணிகள் கப்பல் சேவையில் செரியாபாணி என்ற கப்பல், ஈடுபடவுள்ளதோடு இது ஏற்கனவே கடந்த இருநாட்களாக பரீட்சார்த்த பயணங்களை மேற்கொண்டிருந்தது.
குறித்த கப்பலானது, 25 கோடி இந்திய ரூபா செலவில் கொச்சினில் தயாரிக்கப்பட்டதோடு மணித்தியாலத்திற்கு 36 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக்கூடியதாகும்.
14 ஊழியர்கள் மற்றும் 150 பயணிகளுடன் பயணிக்கும் வசதிகளை கொண்ட குறித்த கப்பலில், பயணிகளுக்கு தேவையான சிற்றுண்டி, தேநீர், குளிர்பானங்கள் போன்றவற்றை கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
நாகைப்பட்டினத்துக்கும், காங்கேசன் துறைக்கும் இடையிலான 64கடல் மைல்களைப் பயணம் மேற்கொள்வதற்கு ஒருவருக்கு ஒருவழி கட்டணமாக 26,750 ரூபாவும் இருவழி கட்டணமாக 53,500 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.