பயங்கரவாதத்துக்கு ஆதரவு காங்., மீது பா.ஜ., சாடல்

11 ஐப்பசி 2023 புதன் 10:32 | பார்வைகள் : 5367
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் விவகாரத்தில், பயங்கரவாத அமைப்புக்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக, பா.ஜ.,குற்றஞ்சாட்டியுள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியுள்ளது. இதையடுத்து, ஹமாஸ் பயங்கரவாதிகள் மீதான போர் துவங்கியுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
இந்த விவகாரத்தில், இஸ்ரேல் அரசுக்கு மத்திய அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் செயற்குழு கூட்டம்புதுடில்லியில் நேற்று முன்தினம் நடந்தது.
அதில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நில உரிமை கேட்டு போராடும் பாலஸ்தீன மக்களுக்கான ஆதரவை காங்கிரஸ் மீண்டும் உறுதி செய்கிறது. தனி அரசு அமைப்பதுடன், கண்ணியத்துடன் வாழ பாலஸ்தீனியர்களுக்கு உரிமை உள்ளது. போரை நிறுத்தி பேச்சு நடத்த வேண்டும்' என, அதில் கூறப்பட்டு உள்ளது.
இது குறித்து பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
காங்கிரஸ் மீண்டும் தன் முகத்தை வெளிப்படுத்தியுள்ளது. பயங்கர வாத அமைப்புக்கு மிகவும் வெளிப்படையாக தன் ஆதரவை தெரிவித்துள்ளது. அப்பாவி மக்களை கொல்லும் பயங்கரவாதத்தை காங்கிரஸ் ஆதரிக்கிறது.
இதன் வாயிலாக, 'இண்டியா' எனப்படும் எதிர்க்கட்சிகள் கூட்டணியை வழிநடத்துவதாக கூறும் காங்கிரஸ், தன் உண்மை முகத்தை நம் நாட்டுக்கு காட்டிஉள்ளது. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் இந்தக் கட்சி, கூட்டணி, நம் நாட்டை எப்படி காப்பாற்றும்.<br><br>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.