சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தின் முக்கியத்துவம்..!
11 ஐப்பசி 2023 புதன் 12:12 | பார்வைகள் : 2798
உலகம் முழுவதும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலின சமத்துவமின்மை குறித்த விழிப்புணர்வூட்டும் வகையில், அக்டோபர் 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தை தினம் கொண்டாடப்படுகிறது.
முன்னதாக, 1995ஆம் ஆண்டு பெய்ஜிங் மாநாட்டில், முதல் முறையாக சர்வதேச அளவில் பெண்கள் மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்து ஒரு செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதனை நிறைவேற்றும் வகையில், 2011ஆம் ஆண்டு, ஐக்கிய நாடு பொது சபை சார்பில், அக்டோபர் 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இதனை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் படி, இன்று அக்டோபர் 11ஆம் தேதி, சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ஆகும். ’பெண் குழந்தைக்கான உரிமைகளில் முதலீடு செய்யுங்கள்: நம் தலைமை, நமது நல்வாழ்வு’ என்பது இந்தாண்டின் கருபொருள் ஆகும்.
குழந்தைத் திருமணம், பெண்களுக்கு எதிரான வன்முறை, கல்வி உரிமை, மற்றும் பெண்கள் சந்திக்கும் பல பிரச்சினைகள் பற்றி ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இந்நாளின் முக்கியத்துவம் என்னவென்றால், பெண் சிசுக் கொலைகளை தடுப்பது பாலின சமத்துவமின்மையை குறைப்பது, பெண் குழந்தைகளின் சமத்துவம் மற்றும் உரிமையை நிலைநாட்டுவது ஆகும். பெண் குழந்தைகளுக்கான சர்வதேச தினமானது, "பெண் குழந்தைகள் தினம்" மற்றும் "சர்வதேச பெண் தினம்" என்றும் அழைக்கப்படுகிறது.
இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்நாளில், பெண் குழந்தைகளின் கல்வி உறுதி செய்யப்படவும், சமத்துவம் மற்றும் வளமான எதிர்காலம் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். இந்த விழிப்புணர்வானது முதலில் நம் வீட்டில் இருந்து தொடங்க வேண்டும். ஆம்..வீட்டில் இருக்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகளை எல்லா
விதங்களிலும் சமமாக நடத்த வேண்டும். எனவே, இந்நாளில், பெண் குழந்தைகள் ஒவ்வொருவரையும் வாழ்த்தி, போற்றி அவர்களை கவுரவிப்போம்.