விஜய் ஆதரவு பெற அண்ணாமலை முயற்சி
9 ஐப்பசி 2023 திங்கள் 22:39 | பார்வைகள் : 3357
அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., இல்லாத நிலையில், வரும் லோக்சபா தேர்தலில், மேலிட தலைவர்களிடம் தெரிவித்தபடி, 20 சதவீத ஓட்டுக்களை வாங்கி காட்ட வேண்டிய கட்டாயம், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு ஏற்பட்டுள்ளது.
இதற்காக புதிய கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைக்கும் வகையில், பல கட்சிகளின் தலைவர்களிடம் பேச்சு நடத்தி வருகிறார்; அத்துடன், நடிகர் விஜயிடமும் ஆதரவு கேட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆயத்தம்
இது தொடர்பாக, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: நடிகர் விஜய் நடித்த, சர்கார் திரைப்படத்தில், அ.தி.மு.க., அரசு வழங்கிய இலவச மிக்சி, கிரைண்டரை விமர்சிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.இதனால், அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க.,வினர், விஜய்க்கு எதிராக கொந்தளித்தனர்.உடன், முதல்வராக இருந்த பழனிசாமியை, அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தார் நடிகர் விஜய். அதன்பின், படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன.
இருப்பினும், அ.தி.மு.க., மீது கோபத்தில் இருந்த விஜய் ரசிகர்கள், ௨௦௨௧ சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்பட்டனர். தற்போது விஜய், புதிய கட்சி துவக்க ஆயத்தமாகி வருகிறார்.அப்படி அவர் கட்சி துவக்கினால், தங்களுக்கு தலித், சிறுபான்மை இன மக்களின்
ஓட்டுகள் விழுவது பாதிக்கும் என, தி.மு.க., தரப்பில் அஞ்சுகின்றனர். அதனால், நடிகர் விஜய் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு நெருக்கடி தரப்படுகிறது.
இது, விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள், வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட விரும்புகின்றனர். அதேநேரத்தில், பணம் கொடுத்து ஓட்டு பெறுவதை அண்ணாமலை போன்றே, நடிகர் விஜயும் கடுமையாக எதிர்த்து வருகிறார்.
இந்நிலையில், பா.ஜ., கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., விலகியுள்ள சூழலில், பா.ஜ., தலைமையில் புதிய கூட்டணியை கட்டமைக்க விரும்புகிறார் அண்ணாமலை.அத்துடன், வரும்
லோக்சபா தேர்தலில், 20 சதவீதத்துக்கும் கூடுதலான ஓட்டு்களை பெற வேண்டும் என்றும் நினைக்கிறார்.அப்படி கிடைத்தால் மட்டுமே, மேலிடத்துக்கு கொடுத்த தன் உறுதிமொழி
காப்பாற்றப்படுவதோடு, தமிழக பா.ஜ.,வின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பது அவரின் எண்ணம். இதனால், அவருக்கு நெருக்கடி உருவாகிஉள்ளது.
ரகசிய பேச்சு
இதற்காக, பா.ஜ.,வுக்கு வெளியில் இருந்தும் ஆதரவுகளை பெற முயற்சிக்கிறார். அந்த முயற்சிகளில் ஒன்று தான், பா.ஜ.,வுக்கு ஆதரவாக நடிகர் விஜயை குரல் கொடுக்க வைப்பது. இதற்காக, விஜய்க்கு நெருக்கமானவர்களோடு பா.ஜ., தரப்பில் ரகசிய பேச்சு நடந்து வருகிறது. இந்த முயற்சி வெற்றி பெற்றாலும், நடிகர் விஜய் நேரடியாக பா.ஜ.,வை ஆதரிக்க மாட்டார். திராவிட இயக்கங்களுக்கு எதிர்ப்பாக தேர்தல் நெருக்கத்தில், 'வாய்ஸ்' கொடுப்பார்.
இது, பா.ஜ.,வுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும் என்பது அண்ணாமலையின் எதிர்பார்ப்பு.
இதுதவிர, மாவட்ட வாரியாக மக்களிடம் செல்வாக்கு உள்ள நபர்கள் குறித்த விபரங்களும் சேகரிக்கப்படுகின்றன. அடுத்த கட்டமாக, அவர்களோடும் பா.ஜ., தரப்பில் பேச உள்ளனர்.
இவ்வாறு பா.ஜ., வட்டாரங்கள் கூறின.
வேட்பாளர் தேர்வுக்கு விபரம் சேகரிப்பு
வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., தரப்பில் யார் யாரெல்லாம் போட்டியிட விரும்புகின்றனர் என்ற விபரத்தை சேகரிக்கும்படி, கட்சியின் செயலர் சுமதி வெங்கடேசன் பணிக்கப்பட்டுள்ளார்.
அவர், தமிழக பா.ஜ.,வின் முக்கிய தலைவர்களை தொடர்பு கொண்டு, 'லோக்சபா தேர்தலில் போட்டியிட விருப்பமா... விரும்பினால் எந்தத் தொகுதியில் போட்டியிட விருப்பம்... அந்தத் தொகுதி மக்களோடு உங்களுக்கு நல்ல பரிட்சயம் உள்ளதா... அந்தத் தொகுதிக்காக செய்த பணிகள் என்ன... அங்கே கட்சியை வளர்க்க மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன... ஒரு வேளை தொகுதி உறுதி செய்யப்பட்டால், எவ்வளவு தொகை செலவழிக்க முடியும்' என்பது உள்ளிட்ட பல்வேறு விபரங்களை சேகரித்து வருகிறார்.
பின், அந்த விபரங்களை தொகுத்து மாநில தலைமையிடம் வழங்க உள்ளார். அதன் வாயிலாக, யார் யாரை வேட்பாளர் ஆக்கலாம் என்பதை கட்சியின் தேசிய தலைமையுடன் ஆலோசித்து முடிவெடுத்து, முன்கூட்டியே வேட்பாளர் பட்டியலை வெளியிடவும், அண்ணாமலை தீர்மானித்து இருப்பதாக, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.