காங்., ஆளும் மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல் உறுதி
9 ஐப்பசி 2023 திங்கள் 23:54 | பார்வைகள் : 3179
நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் ஒருமனதாக ஆதரிப்பதாகவும், காங்., ஆளும் மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அக்கட்சி எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.
டில்லியில் இன்று (அக்.,9) காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்ற நிலையில் காங்., எம்.பி., ராகுல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் ஒருமனதாக ஆதரிக்கிறது. இது மிகவும் முற்போக்கான, ஏழை மக்களின் விடுதலைக்கான சக்திவாய்ந்த நடவடிக்கையாகும். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
'இண்டியா' கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியுள்ளன. ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் திறன் மத்திய பா.ஜ., அரசுக்கு இல்லை. எங்களின் (காங்கிரசின்) 4 முதல்வர்களில் 3 பேர் ஓபிசி வகுப்பை சேர்ந்தவர்கள். ஆனால் பா.ஜ., முதல்வர்களில் எத்தனை ஓபிசி முதல்வர்கள் தெரியுமா? 10 பா.ஜ., முதல்வர்களில் ஒரே ஒரு முதல்வர் தான் ஓபிசி வகுப்பை சேர்ந்தவர்.
பா.ஜ., அரசு ஓ.பி.சி.,க்கு எதுவும் செய்யாமல், அதனை திசை திருப்பும். ஓ.பி.சி.,கள் பிரதிநிதித்துவம் பெறக்கூடாது என்பதில் பிரதமர் மோடி தெளிவாக இருக்கிறார். அவர்கள் திசைதிருப்பப்பட வேண்டும் என்று விரும்புகிறார். ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை மக்களை பிளவுபடுத்தும் முயற்சி என்ற பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு கவனத்தை சிதறடிக்கும் செயல். இவ்வாறு அவர் கூறினார்.