Paristamil Navigation Paristamil advert login

பள்ளிக்கல்வி செயலர் மாற்றம்

பள்ளிக்கல்வி செயலர் மாற்றம்

13 ஐப்பசி 2023 வெள்ளி 08:29 | பார்வைகள் : 2762


அரசுக்கு எதிராக ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ள தொடர் போராட்டம்  காரணமாக, பள்ளிக் கல்வி துறை செயலர் காகர்லா உஷா மாற்றப்பட்டுள்ளார்; புதிய செயலராக, குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். 

தி.மு.க., ஆட்சி அமைந்ததும், பள்ளிக் கல்வி துறை செயலராக காகர்லா உஷாவும், கமிஷனராக நந்தகுமாரும், 2021 மே மாதம் நியமிக்கப்பட்டனர். 

கமிஷனர் பதவியை நீக்கி விட்டு, மீண்டும் பள்ளிக் கல்வி இயக்குனர் பதவியை கொண்டு வர வேண்டும் என, 'ஜாக்டோ ஜியோ' ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தின; போராட்டங்களும் நடத்தப்பட்டன. 

இதையடுத்து, கடந்த மே மாதம், பள்ளிக் கல்வி துறை கமிஷனர் நந்தகுமார், மனிதவள மேலாண் துறை செயலராக மாற்றப்பட்டார். பள்ளிக் கல்வி துறை இயக்குனர் பதவி மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, அறிவொளி நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையில், துறையின் மொத்த பிரிவுகளையும் நிர்வகிக்கும் அதிகாரங்கள், செயலர் காகர்லா உஷா வசம் சென்றன. 

இந்த நிர்வாக மாற்றத்தால், தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என, ஆசிரியர் சங்கத்தினர் எதிர்பார்த்தனர். ஆனால், பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேறாததால் ஏமாற்றம் அடைந்தனர்.

இதையடுத்து, மீண்டும் போராட்டத்தில் ஆசிரியர் சங்கத்தினர் இறங்கினர். அமைச்சர் தரப்பிலும், இயக்குனர் தரப்பிலும் அவ்வப்போது பேச்சு நடத்தி, சமாதானம் செய்தாலும், போராட்டத்தின் தீவிரம் குறையவில்லை.

இந்த விவகாரத்தில், துறை செயலர் அளவில், சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேசுவது; அவர்களின் குறைகளை அவ்வப்போது தெரிந்து கொள்வது; அரசின் நிதிநிலைக்கு ஏற்ப, கோரிக்கைகளை நிறைவேற்றுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற புகார் எழுந்தது.

இதையடுத்து, துறை செயலராக இருந்த காகர்லா உஷாவை இடமாற்றம் செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக, தகவல் தொழில்நுட்ப துறை செயலராக இருந்த குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஹிந்து சமய அறநிலையத் துறை, தகவல் தொழில்நுட்ப துறை போன்றவற்றில், குமரகுருபரன் பொறுப்பு வகித்தபோது, சிறப்பாக செயல்பட்டு உள்ளதாக, ஆளும் கட்சி கருதுகிறது.

லோக்சபா தேர்தல் வரவிருக்கும் நிலையில், ஆளும் கட்சிக்கு ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் வகையில், சங்கத்தினரை சமாதானம் செய்து, சங்க நிர்வாகிகளின் கோரிக்கைகளை செய்து தந்து, அவர்களை இணக்கமாக வைத்துக் கொள்ளும் பணியில், செயலர் குமரகுருபரன் முக்கிய பங்காற்றுவார் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

காகர்ல உஷா உள்ளிட்ட

ஐந்து பேர் மாற்றம்


* பள்ளிக் கல்வித் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ள குமரகுருபரன், நிதி செலவினம் செயலர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்

* சுற்றுலா கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள காகர்லா உஷா, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மேலாண் இயக்குனாகவும் செயல்படுவார்

* இதற்கான உத்தரவை, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்