Paristamil Navigation Paristamil advert login

இலங்கை இந்தியா பயணிகள் கப்பல் சேவை இன்று ஆரம்பம்!

இலங்கை இந்தியா பயணிகள் கப்பல் சேவை இன்று ஆரம்பம்!

14 ஐப்பசி 2023 சனி 06:46 | பார்வைகள் : 3278


தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கை காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று (14) ஆரம்பமாகிறது.

இரு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைய, பயணிகள் கப்பல்  சேவை முன்னெடுக்கப்படும் என துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.

செரியாபாணி (Cheriyapani) எனும் பயணிகள் கப்பல் 100 பயணிகளுடன் நாகப்பட்டினத்தில் இருந்து இன்று காங்கேசன்துறையை வந்தடையவுள்ளது.

மணித்தியாலத்திற்கு 36 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த பயணிகள் கப்பல், 60 கடல்மைல் தூரத்தை 3 மணித்தியாலங்களில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

14 ஊழியர்கள், 150 பயணிகளுடன் பயணிக்கும் வசதிகளைக் கொண்ட இந்த குளிரூட்டப்பட்ட கப்பலில், பயணிகளுக்கு தேவையான சிற்றுண்டி, தேநீர், குளிர்பானங்களை கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளாந்தம் நாகப்பட்டினத்திலிருந்து காலை 7:00 மணிக்கு புறப்பட்டு காலை 11.30 மணிக்கு காங்கேசன்துறை துறைமுகத்தை செரியாபாணி கப்பல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் பிற்பகல் 2.00 மணிக்கு நாகப்பட்டினத்திற்கான பயணத்தை ஆரம்பிக்கவுள்ள செரியாபாணி கப்பல், மாலை 5.00 மணிக்கு துறைமுகத்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதியாக 1984 ஆம் ஆண்டு தலைமன்னாருக்கும் இராமேஷ்வரத்திற்குமிடையில் கப்பல் சேவை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்