Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க.,கூட்டணி: யோசிக்க துவங்கியது காங்.,...

தி.மு.க.,கூட்டணி: யோசிக்க துவங்கியது காங்.,...

14 ஐப்பசி 2023 சனி 19:20 | பார்வைகள் : 2610


அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க., உடனான  கூட்டணி குறித்து யோசித்து முடிவெடுக்க உள்ளதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன  கார்கே தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள்   வெளியான பின், கூட்டணி குறித்து காங்., முடிவெடுக்கும் என, கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என சூளுரைத்த பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதீஷ் குமார், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 

பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களுடனும் பேசி, தன் முயற்சியில் ஓரளவு வெற்றி கண்ட பின், நிதீஷ் குமாரின் முயற்சியை காங்கிரஸ் தன் வசப்படுத்தியது. 28 கட்சிகள் அடங்கிய இந்த கூட்டணிக்கு தலைமை ஏற்று, 'இண்டியா' கூட்டணி என பெயரும் சூட்டியது. பாட்னா, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களில் கூடி, இந்த கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்த கூட்டணியில் தி.மு.க.,வும் அங்கம் வகிக்கிறது. எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்த நேரத்தில், தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிசனாதனம் குறித்து விமர்சித்தார்.  <br>இது வட மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தர்மசங்கடத்தை உண்டாக்கியது. 'இது உதயநிதியின் தனிப்பட்ட கருத்து' எனக் கூறி, காங்கிரஸ் தலைவர்கள் ஒதுங்கிக் கொண்டனர். 

கலக்கம்

இந்த நேரத்தில் தான், பா.ஜ.,வுடன் இனி கூட்டணி இல்லை என, அ.தி.மு.க., திட்டவட்டமாக அறிவித்தது; இது, தமிழக காங்கிரசில் மட்டுமின்றி டில்லியில் உள்ள காங்., மேலிடத்திலும் லேசான சலனத்தை ஏற்படுத்தியது. தி.மு.க., தரப்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. 

இதற்கு அடுத்தபடியாக மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேதிகள் அறிவிக்கப்பட்டன. முடிவுகள் டிச., 3ல் வெளியாகின்றன. இந்த தேர்தலில், மிசோரத்தை தவிர மீதியுள்ள நான்கு மாநிலங்களில் ஆட்சியை பிடித்து விடுவோம் என, காங்., தலைமை உறுதியாக நம்புகிறது. 

அதிலும், 'ம.பி.,யில் நிச்சயம் காங்., ஆட்சி அமையும்' என, அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நிருபர்களிடம் சமீபத்தில் நம்பிக்கையுடன் தெரிவித்தார். இந்நிலையில், தி.மு.க.,வுக்கு, 'செக்' வைக்கும் விதமான ஒரு காய் நகர்த்தலை, காங்கிரஸ் தலைமை சமீபத்தில் நிகழ்த்தி உள்ளது.

காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொது செயலர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் ஆகியோர், புதுடில்லியில் நிருபர்களை சமீபத்தில் சந்தித்தனர். <br><br>அப்போது, லோக்சபா தேர்தலில் தமிழக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, 'அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை' என, மூவரும் திட்டவட்டமாக மறுத்தனர்.

குழப்பம்

அதே நேரம், 'தி.மு.க.,வுடனான கூட்டணி குறித்து யோசித்து முடிவெடுக்கப்படும்' என, மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். ம.பி., தேர்தல் முடிவுகள் வெளியான பின், அது குறித்து காங்., செயற்குழு கூடி முடிவை அறிவிக்கும் என்றும் தெரிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், நான்கில் காங்., வெற்றி பெற்றுவிட்டால், அதன் பலம் கணிசமாக உயரும். அதோடு, சனாதன விவகாரம், வட மாநிலங்களில் காங்கிரசுக்கு எதிராக திரும்பிவிடக் கூடாது என்ற கவலையும் தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.

போதாத குறைக்கு, தமிழகத்தில் தி.மு.க.,வுக்கு லேசான சறுக்கல் இருப்பதாக, டில்லிக்கு சமீபத்தில் சென்றிருந்த காங்., தலைவர்கள் மூவர், கார்கேயிடம் கூறி உள்ளனர்.

தி.மு.க., ஆட்சி மீதும் மக்களுக்கு அதிருப்தி இருப்பதால், லோக்சபா தேர்தலை தி.மு.க., கூட்டணியுடன் இணைந்து சந்திப்பது சாதமாக அமையாது என்றும், அவர்கள் கூறியதாக தெரிகிறது. இது காங்., தலைமையை சிந்திக்க வைத்துள்ளது. 

அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை என, மல்லிகார்ஜுன கார்கே இப்போது கூறினாலும், டிச., மாதம் தான் இது குறித்து அக்கட்சி தலைமை முடிவெடுக்கப் போகிறது. ஒரு கதவு மூடப்பட்டால், மறுகதவு நிச்சயமாக திறக்கும் என, தமிழக காங்., தலைவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்