முக்கிய தலைவர்களை களமிறக்குகிறது பா.ஜ.,
11 ஐப்பசி 2023 புதன் 21:48 | பார்வைகள் : 3214
வலுவான கூட்டணி இல்லாததால், வரும் லோக்சபா தேர்தலில், மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்களை களமிறக்க, பா.ஜ., திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.
கடந்த, 1998 முதல் 2004 வரை ஆட்சியில் இருந்த பா.ஜ., பின், 2004, 2009 லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தது. அதனால், 2014ல் பல்வேறு புதிய யுக்திகளை கையாண்டது.
முக்கியத்துவம்:
அதன் ஒரு பகுதியாக, மக்களிடம் நன்கு அறிமுகமான முக்கிய தலைவர்களை, தேர்தலில் களமிறக்கியது. தேர்தலிலேயே போட்டி இடாத அருண் ஜெட்லி, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியில் களமிறக்கப்பட்டார். அடுத்தடுத்து நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், உமாபாரதி உள்ளிட்ட பிரபலமான தலைவர்கள், களத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
மேலும், 2019 லோக்சபா தேர்தலில், பீஹார் மாநிலம், பாட்னா தொகுதியில், மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை எதிர்த்து, சாத்வி பிரக்யா சிங் ஆகியோர் களமிறக்கப்பட்டனர். மாநில அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்கள், அந்தந்த மாநிலங்களில் போட்டியிட்டனர்.
மக்களிடம் நன்கு அறிமுகமான, பிரபலமான தலைவர்கள் போட்டியிடும்போது, அது மாநிலம் முழுக்க பேசு பொருளாகி, கட்சிக்கு பலன் கொடுக்கும்; எந்த கட்சியையும் சாராத வாக்காளர்களையும் கவரும் என்பதால், இந்த யுக்தியை பா.ஜ., கையாண்டது; அதற்கு வெற்றியும் கிடைத்தது.
கூட்டணியில் இல்லை:
தற்போது, 2014, 2019 தேர்தல்களை விட, 2024 லோக்சபா தேர்தல் பா.ஜ.,வுக்கு சவால் நிறைந்ததாக மாறியுள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க., உள்ளிட்ட, 28 கட்சிகள் இணைந்து, 'இண்டியா' கூட்டணியை உருவாக்கியுள்ளன.
சிவசேனா, அகாலிதளம், ஐக்கிய ஜனதா தளம், அ.தி.மு.க., போன்ற கட்சிகள், பா.ஜ., கூட்டணியில் இல்லை. வலுவான கூட்டணி இல்லாததால், சிறிய கட்சிகளை மட்டுமே நம்பி களமிறங்க வேண்டிய சூழல், பா.ஜ.,வுக்கு ஏற்பட்டுள்ளது.
இதை எதிர்கொள்ள, ராஜ்யசபா எம்.பி.,யாக இருக்கும் மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்களை, அவரவர் மாநிலங்களில் போட்டியிட வைக்க, பா.ஜ., ஆலோசித்து வருகிறது.
அதன்படி, தென் சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்லது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை களமிறக்கலாமா என்று, பா.ஜ., தலைமை யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
தக்க வைக்க
கடந்த 2014ல் குஜராத், உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டார். இதனால், இந்த இரு மாநிலங்களிலும் வரலாறு காணாத வெற்றியை, பா.ஜ., பெற்றது. கர்நாடகாவில், தற்போது காங்கிரஸ் வலிமை பெற்றுள்ளது. தென் மாநிலங்களில், பா.ஜ.,வுக்கு வாய்ப்புள்ள ஒரே மாநிலம் என்பதால், அங்கு பெற்ற வெற்றியை தக்கவைக்க, கர்நாடகாவிலும் போட்டியிட மோடி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.