சட்டசபையில் அ.தி.மு.க.,வெளியேற்றம்?
12 ஐப்பசி 2023 வியாழன் 10:00 | பார்வைகள் : 3101
சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கான இருக்கை விவகாரத்தை கிளப்பியபழனிசாமி, தங்களின் நியாயமான கோரிக்கை மறுக்கப்படுவதாக கொந்தளித்தார். அதைத் தொடர்ந்து, சபாநாயகருக்கு எதிராக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் திடீர் போராட்டத்தில் இறங்கியதுடன், அவரது இருக்கை முன் அமர்ந்து, கோஷம் போட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதை அடுத்து, அ.தி.மு.க.,வினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை குறித்தும், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் குறித்தும், நடவடிக்கை எடுக்கக் கோரி, தங்களிடம், 10 முறை கடிதம் கொடுத்துள்ளோம்.
அதற்கான ஆவணங்களை இணைத்து கடிதம் கொடுத்துள்ளோம். சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நகல் அளித்துள்ளோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் கொடுத்துள்ளோம். எங்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க மறுக்கிறீர்கள்.
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையில், அவர்களை குறைத்து, அவர்கள் நீக்கப்பட்டதாக, இதுவரை அறிவிக்கவில்லை. அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்.
சபாநாயகர் அப்பாவு: எதிர்க்கட்சி தலைவர் நீங்கள் என்பதையும், துணைத் தலைவர் உதயகுமார் என்பதையும், நாங்கள் மறுக்கவில்லை.
கடந்த 2013ம் ஆண்டு பிப்., 6ம் தேதி, அப்போதைய சபாநாயகர், 'சபைக்குள் இருக்கை குறித்து யாரும் கேள்வி கேட்க உரிமை இல்லை. அது என்னுடைய உரிமை' எனக் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் பதவி மட்டும் தான் அனுமதிக்கப்பட்ட ஒன்று. மற்ற பதவிகளை, மரபுப்படி கூறிக் கொள்கிறோம்.
இருக்கை விவகாரத்தில், விதியின்படி நடக்கிறேன். மறைந்த தலைவர் கருணாநிதிக்கு, முதுமை காரணமாக, முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கும்படி கேட்டபோது, 'ஏற்கனவே உள்ளது போதுமானது' என, உங்கள் ஆட்சியில் கூறி உள்ளீர்கள்.
உறுப்பினர்கள் யாருக்கும் மனக்குறை வரக் கூடாது என்ற வகையில், சபையை நடத்துகிறோம். மூன்று பேரை நீக்கி இருக்கக்கூடிய கடிதத்தை வழங்கி உள்ளீர்கள்; அதை பரிசீலிக்கிறேன்.
ஒரு உறுப்பினர், எந்த சின்னத்தில் வெற்றி பெற்றாரோ, அதே கட்சியில் கடைசி வரை இருப்பதாக தான் பார்ப்பேன்.
ஒரு சின்னத்தில் வெற்றி பெற்று, அதற்கு எதிராக ஓட்டளித்தால், அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.அவ்வாறு ஓட்டளித்த பன்னீர்செல்வம் உட்பட, 11 பேரை, நீங்கள் நீக்கவில்லை. அதுபோல் ஒரு சம்பவம் நடந்தால், இப்போது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன்.
பழனிசாமி: இருக்கை ஒதுக்குவது, உங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டது. ஆனால், துணைத் தலைவர் இருக்கையை, தலைவருக்கு அருகே ஒதுக்குவதுதான் மரபு. இதுவரை அவ்வாறுதான் நடந்துள்ளது; அதைத்தான் கேட்கிறோம்.
காங்கிரஸ் கட்சிக்கு, 18 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அக்கட்சி தலைவர் அருகே, துணைத் தலைவர் இருக்கை வழங்கப்பட்டுள்ளது. எங்களுக்கு மட்டும் ஏன் மறுக்கிறீர்கள்?
இதையடுத்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து நின்று, சபாநாயகருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். சில எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகர் இருக்கை முன் தரையில் அமர்ந்து கோஷமிட்டனர்.
அப்போது சபாநாயகர், ''சட்டசபையில் அரசியல் செய்யக் கூடாது. உட்கட்சி விவகாரத்தை, வெளியில் வைத்துக் கொள்ளுங்கள். அனைவரும் இருக்கைக்கு செல்லுங்கள். இல்லையெனில் நடவடிக்கை எடுப்பேன்,'' என, எச்சரிக்கை விடுத்தார்.
ஆனாலும், அ.தி.மு.க.,வினர் தொடர்ந்து கோஷமிட்டதால், அவர்களை வெளியேற்றும்படி, சபைக் காவலர்களுக்கு, சபாநாயகர் உத்தரவிட்டார். காவலர்கள் உள்ளே வந்து, தரையில் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ.,க்கள் ரவி, சக்கரபாணி உள்ளிட்டோரை, குண்டுக்கட்டாக வெளியே துாக்கிச் சென்றனர்; மற்றவர்களை வெளியேற்றினர்.
அதன் பின்பு, சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:
அவர்கள் கட்சி பிரச்னையை, சட்டசபையில் தீர்த்து வைக்க வேண்டும் என விரும்புகின்றனர். உட்கட்சி விவகாரத்தில் சபை தலையிடாது. யார் யாரை எங்கு அமர வைக்க வேண்டும் என்பதை முடிவு செய்து, ஏற்கனவே இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.அதை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மாற்றுவேன்.
இருவரையும் கவர்னர் சேர்த்து வைத்தால், நான் என்ன சொல்ல முடியும்? அது, அவர்கள் உட்கட்சி விவகாரம். ஏற்கனவே எதிர்க்கட்சியினர், தினகரன், பன்னீர்செல்வம், சசிகலா, பழனிசாமி தலைமையில், நான்கு குழுக்களாக உள்ளனர். நான்கு பேரும் மத்திய அரசு பிரச்னையில் ஒற்றை கருத்தாக உள்ளனர்.
எனவே, அவர்கள் சேரவே மாட்டார்கள் என்று கூற முடியாது. முதலாளி, நான்கு பேரையும் உட்கார வைத்து, சேர்த்து வைத்தால், நாம் என்ன செய்ய முடியும்? சேர்ந்திருக்கட்டும்; சந்தோஷம் என்று தான் கூற முடியும்.இவ்வாறு சபாநாயகர் கூறினார்.
தற்போது, சபையில் எதிர்க்கட்சி தலைவரான பழனிசாமிக்கு அருகில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு இருக்கை ஒதுக்கப்பட்டு உள்ளது.
அவரை கட்சியில் நீக்கி விட்டதாக கூறி, அந்த இடத்தை, எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற முறையில், உதயகுமாருக்கு ஒதுக்குமாறு, அ.தி.மு.க., வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரம்தான் சட்டசபையில் நேற்று எதிரொலித்தது