25 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தில் சோனியா, பிரியங்கா
12 ஐப்பசி 2023 வியாழன் 12:03 | பார்வைகள் : 4105
தி.மு.க., மகளிர் உரிமை மாநாட்டில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவும், பொதுச்செயலர் பிரியங்காவும் ஒன்றாக பங்கேற்கின்றனர்.
கடந்த, 1998ல் காங்கிரஸ் தலைவராக, சோனியா பொறுப்பேற்றதும், அப்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில், சோனியா, பிரியங்கா பங்கேற்ற மாநாடு, தமிழகத்தில் நடந்தது.
அப்போது, பிரியங்கா நேரடி அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும் கூட, கட்சி நிகழ்ச்சியான அம்மாநாட்டில் பங்கேற்றார். அதன்பின், 2018ம் ஆண்டில், காங்கிரஸ் பொதுச்செயலராக பிரியங்கா பொறுப்பேற்று, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், சென்னையில் வரும் 14ல் நடக்கவுள்ள தி.மு.க., மகளிர் உரிமை மாநாட்டில், சோனியா, பிரியங்கா இருவரும் ஒரே மேடையில் பங்கேற்கின்றனர்.முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி முன்னிலையில் நடக்கும் மாநாட்டில், சோனியா சிறப்புரை ஆற்றுகிறார். பிரியங்கா, சுப்ரியா சுலே, சுபாஷினி அலி, ஆனி ராஜா, சுஷ்மிதா தேவ் ஆகியோரும் பேசுகின்றனர்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் சோனியா, பிரியங்கா பங்கேற்ற மாநாடு, ஸ்ரீபெரும்புதுார் அருகே நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு பின், தற்போதைய மாநாட்டில் தான், சோனியாவும், பிரியங்காவும், தமிழகத்தில் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளனர்.
சத்தியமூர்த்தி பவன் வர பிரியங்காவுக்கு அழைப்பு
அக்., 14ல், சென்னைக்கு வரும் சோனியா, பிரியங்கா ஆகியோர், தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வர வேண்டும் என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, இது தொடர்பாக, வட சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம் கூறியதாவது:சத்தியமூர்த்தி பவனுக்கு, ஏற்கனவே சோனியா வந்துள்ளார். அவருக்கு அப்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில், வரவேற்பு கொடுக்கப்பட்டது. பிரியங்கா இதுவரை, சத்தியமூர்த்திபவனுக்கு வந்ததில்லை. அவரும் முதல் முறையாக, சத்தியமூர்த்தி பவனுக்கு வர வேண்டும் என, காங்கிரஸ் தொண்டர்கள் விரும்புகின்றனர்.
அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க முடிவு செய்துள்ளோம். பிரியங்காவுக்கு 'இ - மெயில்'கடிதம் வாயிலாக, அழைப்பு விடுத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.