Paristamil Navigation Paristamil advert login

மாவுச்சத்து உணவால் இதயத்திற்கு பாதிப்பு உண்டா?

மாவுச்சத்து உணவால் இதயத்திற்கு பாதிப்பு உண்டா?

12 ஐப்பசி 2023 வியாழன் 13:58 | பார்வைகள் : 2702


நாம் ஆரோக்கியமாக வாழ இதய நலன் மிக அவசியமானது. இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படியும் பட்சத்தில் அடைப்பு ஏற்பட்டு, அதனால் ஹார்ட் அட்டாக் ஏற்படலாம். பெரும்பாலும் கெட்ட கொழுப்பு எனப்படும் எல்டிஎல் வகை கொழுப்புகள் தான் மிக ஆபத்தானவை. அந்த வகையில் கொலஸ்ட்ரால் மிகுதியாக இருக்கும் நபர்கள் சிவப்பு இறைச்சி, நெய், வெண்ணெய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

அதே சமயம், இந்தியர்கள் பெரும்பாலும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்கின்ற மாவுச்சத்து உணவுகளாலும் கூட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கலாம். இது எப்படி அதிகரிக்கிறது, இது எந்த வகையில் உடலுக்கு ஆபத்தானது? இதைத் தடுப்பது எப்படி என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

மாவுச்சத்து உணவுகளால் கொலஸ்ட்ரால் அதிகரிப்பது எப்படி? பொதுவாகவே இந்தியர்களுக்கு மரபு ரீதியாக ஹெச்டிஎல் என்னும் நல்ல கொலஸ்ட்ரால் அளவுகள் குறைவாகவே இருக்கும். அதே சமயம் மாவுச்சத்து உணவுகளை சாப்பிடுவதால் உடலில் டிரைகிளிசைரைடு என்னும் வகையிலான கொழுப்பு வகை அதிகரிக்கும். இதுதான் நம் உடலில் பின்பு கெட்ட கொழுப்பாக மாறுகிறது.

மாவுச்சத்து உணவால் இதயத்திற்கு பாதிப்பு உண்டா? மாவுச்சத்து உணவை சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்கும் என்றும், அதன் எதிரொலியாக கல்லீரல் கொழுப்பு அழற்சி நோய் மற்றும் இதய நோய் ஆகியவை ஏற்படும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நம் உடலில் ஹெச்டிஎல் என்னும் நல்ல கொழுப்பு அளவுகள் அதிகரிக்கும்போது, அது எல்டிஎல் என்னும் கெட்ட கொழுப்புகளை அப்புறப்படுத்தி விடும். ஆனால், டிரைகிளிசைரைடு கொழுப்புகளை அது வெளியேற்றாது.

சீரான உணவு அளவு என்ன ? நாம் சாப்பிடும் உணவில் பெரும்பாலும் 20 சதவீதம் அளவுக்குத்தான் புரதம் இருக்கும். எஞ்சியுள்ள 80 சதவீத அளவுள்ள உணவில் 40 சதவீதம் மாவுச்சத்து கொண்ட உணவுகளையும், 40 சதவீதம் கொழுப்புகள் கொண்ட உணவையும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

நல்ல கொழுப்பு எதில் கிடைக்கும்? முதல் கெட்ட கொழுப்புகளை குறைக்க வேண்டும் என்றால் ஏற்கனவே சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. அதே சமயம், நட்ஸ், விதைகள், மீன் போன்றவற்றை எடுத்துக் கொண்டால் நமக்கான நல்ல கொழுப்புகள் அதிகரிக்கும். உதாரணத்திற்கு பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு போன்றவற்றில் இருந்து நல்ல கொழுப்புகள் கிடைக்கும்.

சராசரி கொலஸ்ட்ரால் அளவுகள் என்ன? நம் உடலில் மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mg/dL என்ற அளவிலும், கெட்ட கொழுப்புகள் 100 mg/dL என்ற அளவிலும், நல்ல கொழுப்புகள் 60 mg/dL என்ற அளவிலும் இருந்தால் இதய நலனுக்கு அது சிறந்ததாகும். ரத்தப் பரிசோதனை செய்து கொள்வதன் மூலமாக கொலஸ்ட்ரால் அளவுகளை தெரிந்து கொள்ளலாம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்