தற்கொலை செய்த வீரருக்கு ராணுவ மரியாதை கிடையாது
16 ஐப்பசி 2023 திங்கள் 10:18 | பார்வைகள் : 2624
ஜம்மு - காஷ்மீரில் பணியின் போது தற்கொலை செய்து உயிரிழந்த காரணத்தால், ராணுவ வீரர் அம்ரித்பால் சிங்கின் இறுதிச் சடங்கில் ராணுவ மரியாதை அளிக்கப்படவில்லை என, ராணுவம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபின் மன்சா மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், மத்திய அரசின் அக்னிவீர் திட்டத்தின் வாயிலாக ராணுவத்தில் பணியில் சேர்ந்தார். ரைபிள் படைப்பிரிவில் சேர்ந்த அவர், ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.
கடந்த 11ம் தேதி பணியில் இருந்தபோது, தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல், பஞ்சாபில் உள்ள சொந்த கிராமத்துக்கு எடுத்துவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்படவில்லை.
இதற்கு பஞ்சாபை சேர்ந்த அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இது குறித்து பஞ்சாப் காங்., தலைவர் அம்ரீந்தர் சிங் ராஜா வாரிங் கூறியதாவது: உயிரிழந்த அக்னிவீரர் அம்ரித்பால் சிங்கின் இறுதிச் சடங்கில் ராணுவ மரியாதை அளிக்கப்படவில்லை.
அவர் அக்னிவீரர் என்பதால் அவமரியாதை செய்யப்பட்டதா? அவருக்கு அரசு மரியாதை அளிக்கும்படி அவரது குடும்பத்தினர் பஞ்சாப் போலீசிடம் முறையிட வேண்டும். அக்னி வீரர்களை இந்த அரசு இப்படித்தான் நடத்துமா?
மற்ற ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் மரியாதையை அக்னிவீரர்களுக்கு ஏன் இந்த அரசு அளிக்க மறுக்கிறது? இதற்கு பா.ஜ., அரசு பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக ராணுவம் அளித்துள்ள விளக்கம்:
அக்னிவீரர் அம்ரித்பால் சிங், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார். ராணுவ விதிமுறையின்படி, தன் உயிரை தானே மாய்த்த வீரருக்கு ராணுவ மரியாதை அளிக்கப்படாது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது