Paristamil Navigation Paristamil advert login

அரசுக்கு எதிராக போராட்டம்: களம் இறங்குகிறது மார்க்சிஸ்ட்

அரசுக்கு எதிராக போராட்டம்: களம் இறங்குகிறது மார்க்சிஸ்ட்

16 ஐப்பசி 2023 திங்கள் 10:24 | பார்வைகள் : 2856


கூட்டணி கட்சி என்பதால், இதுநாள் வரை நீக்கு போக்காக நடந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூ., தலைவர்களுக்கு, கட்சிக்குள் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, தி.மு.க., அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்த, அக்கட்சியின் தொழிற்சங்க பிரதிநிதிகள் முடிவு செய்துள்ளனர். 

இதுதொடர்பாக, அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: 

தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன், அரசு ஊழியர்களுக்கு உள்ள பிரச்னைகளை, தொழிற்சங்க பிரதிநிதிகள், கட்சி தலைமைக்கு கொண்டு சென்றனர். குறிப்பாக, பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது தான், அரசு ஊழியர்களின் பிரதான கோரிக்கை.

இதுதொடர்பாக, அப்போதே தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடம் பேசினோம். அவர், 'தி.மு.க., ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் கட்டாயம் செய்து கொடுக்கலாம். தேர்தல் அறிக்கையிலும், அதை முக்கிய வாக்குறுதியாக சொல்ல போகிறோம்' என்றார். 

அதை நம்பி, கட்சியின் தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், அரசு ஊழியர்களிடம் பேசினர். அவர்களும், தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டு போட்டனர். ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், அரசு ஊழியர்கள் சங்கத்தினர், இரண்டரை ஆண்டுகள் பொறுமை காத்தனர். 

அவர்களின் கோரிக்கை நிறைவேறவில்லை. அதனால், போராட துவங்கி விட்டனர். அத்துடன், போக்குவரத்து, அங்கன்வாடி, டாஸ்மாக், வருவாய் துறைகளின் தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

எங்கள் கட்சியின் தொழிற்சங்க பிரதிநிதிகளிடமும் முறையிட துவங்கி உள்ளனர். இதையடுத்து, முதல்வர் ஸ்டாலினை, மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் சந்தித்தார். லோக்சபா தேர்தலில், ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் தி.மு.க., கூட்டணிக்கு எதிராக ஓட்டளிப்பர் என்பதை எடுத்து கூறினார். 

'இதில் தீவிர கவனம் செலுத்துகிறேன்' எனக்கூறி, பாலகிருஷ்ணனை முதல்வர் சமாதானப்படுத்தி அனுப்பினார். 

இருப்பினும், கட்சிக்கு இருக்கும் நெருக்கடியை தவிர்க்க, தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர் பிரச்னைகளை வலியுறுத்தி, போராட்ட களத்தில் இறங்க, மார்க்சிஸ்ட் கம்யூ., தயாராகிறது. 

அப்படி போராடும்போது தான், அரசும் நெருக்கடியை புரிந்து, பிரச்னைகளை தீர்க்க முயற்சி செய்யும். அத்துடன், கம்யூனிஸ்ட்கள் மீது அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையை குறையாமல் பார்த்துக் கொள்ள  முடியும்.இவ்வாறு அவர் கூறினார். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்