சிதறிக்கிடக்கும் சோமாலியா
16 ஐப்பசி 2023 திங்கள் 09:21 | பார்வைகள் : 2833
இந்து சமுத்திர பிராந்தியத்தின் வடமேற்கு பிராந்திய அமைதியை நிர்ணயிக்கக் கூடிய இடத்தில் சோமாலியா உள்ளது. இந்த நாட்டில் அமைதியான ஓர் அரசை கட்டி அமைப்பதில் சர்வதேசம் மிக ஆர்வத்துடன் உள்ளது. ஆனால், சர்வதேச முயற்சிகள் அனைத்திற்கும் சவாலாக சோமாலியாவின் உள்நாட்டு விவகாரம் உள்ளது.
உள்நாட்டு அரசியலில் நிலையற்ற தன்மைக்கு சோமாலியா பெயர் போன நாடாக உள்ளது. 1991இல் சோவியத் செல்வாக்கு நிலை குலைந்ததில் இருந்து ஒரு நிரந்தரமாக வலுவான மத்திய அரசு ஒன்றை கட்டமைப்பதில் பல் வேறு சிரமங்களை கண்டு வருகிறது.
பல வருட உள்நாட்டு மரபு ஆயுதக்குழுக்களின் மத்தியில் இடம் பெற்ற யுத்தங்களின் பிற்பாடு 2004ஆம் ஆண்டளவில் பிராந்திய கூட்டாட்சி அரசு ஒன்றை அமைக்கும் முயற்சியை ஆரம்பித்தது. பிராந்தியங்கள் மத்தியில் உள்நாட்டு வளங்களை பகிர்ந்து கொள்வதற்கு ஏற்ப அதிகரித்த அதிகாரங்களுடன் ஒரு கூட்டாட்சி அரசை உருவாக்கும் முயற்சி தொடர்ச்சியாக தோல்வியில் முடிவடைந்து வருகிறது.
ஆபிரிக்காவின் கொம்பு என்று அழைக்கப்படும் பிராந்தியத்தின் கூர் முனைக் கொம்பாக சோமாலியா உள்ளது. இலக்கம் ஏழு போல் உருவமைப்பில் உள்ள இதன் வடபகுதியில் மேற்காக உள்ள பகுதியானது சோமாலிலாந்து என்ற பெயரில் இருபது வருடங்களுக்கு முன் சோமாலியாவிடமிருந்து பிரிந்து சுதந்திர பிரகடனம் செய்து கொண்டது.
அரபு நாடுகளையும் ஆபிரிக்காவையும் பிரிக்கும் ஏடன் குடாக் கடல் ஓரமாக ஜெபுட்டியை மேற்காகவும், எத்தியோப்பியாவை தெற்காகவும் எல்லைகளாகக் கொண்ட சோமாலிலாந்து, மொகதிசு உட்பட எந்த சர்வதேச அங்கீகாரமும் பெறாத பிராந்தியங்களையும் கொண்ட அரசு ஒன்றை கட்டமைத்து நிர்வகித்து வருகிறது. 1991ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச நாடுகள் மத்தியில் தனது இறையாண்மைக்காக உரிமைகோரி நிற்கும் சோமாலிலாந்து, மிகவும் இராஜதந்திரமான முறையில் தன்னை முற்று முழுதாக சோமாலியத் தலைநகர் மொகதிசுவிடம் இருந்து பிரித்துக் கொண்டு விட்டது.
2017ஆம் ஆண்டு சோமாலிலாந்து சுயமான பொதுத்தேர்தல் ஒன்றை நடத்தியது. இதற்கு பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் முதலானவற்றை பார்வையாளர்களாக அழைத்து இருந்தது. இந்த வகையில் சோமாலியாவிலிருந்து பிரிந்து செல்லும் வலுவான சந்தர்ப்பங்களை சோமாலிலாந்து உருவாக்கி கொண்டுள்ளது.
ஆனால் மொகதிசு இன்னமும் சோமாலிலாந்து தனது ஆட்சிக்கு உட்பட்டது என்று கூறி உரிமை கோரி வருகிறது.
இதேவேளை 2021ஆம் ஆண்டு அமெரிக்காவில் தற்போதைய பைடன் நிர்வாகம் பதவி ஏற்றதில் இருந்து சோமாலியாவின் நடவடிக்கைகளிலும் பல்வேறு இராணுவ செலவினக் குறைப்புகளை முதன்மையாக கொண்ட நடவடிக்கைகளே இடம் பெற்று வருகின்றன.
1991 இல் சோவியத் சார்பு ஆட்சி கலைப்பிற்கு பின் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக எழுந்த பட்டினி சாவை தவிர்க்கும் வகையிலான அமெரிக்க உதவிகள் என்ற போர்வையில் அமெரிக்கா கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சோமாலியாவில் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்தது.
ஐக்கிய நாடுகள் உதவிப்பணிகளின் சார்பில் உள் நுழைந்த அமெரிக்கா, சோமாலியாவின் அனைத்து தரப்பினரதும் எதிர்ப்பை சந்திக்க வேண்டி ஏற்பட்டது. இந்த காலப்பகுதியிலேயே அமெரிக்க பிளக் ஹோக் உலங்கு வானூர்திகள் சோமாலியர்களால் சுட்டு வீழ்த்துப்பட்ட நிகழ்வும் இடம் பெற்றது.
மிக அதிக அளவிலான உயிர்ப் பலி கொடுக்கப்பட்ட இந்த யுத்தத்தின் பின் தொடர்ந்து நிலை கொண்டிருந்த அமெரிக்கப் படைகள், இஸ்லாமிய ஆயுத தாரிகளின் தாக்குதல்களையும் எதிர் கொள்ள நேர்ந்தது. அந்த காலப்பகுதியில் அல் குவைதா போராட்டக்காரர்களை கொல்லும் முயற்சியில் உள்ளூரில் தமக்கு சாதகமாக செயற்படக் கூடிய மரபு ரீதியான தலைவர்களுக்கு அமெரிக்க அதிகாரிகள் பண உதவிகளையும் ஆயுத உதவிகளையும் செய்ததாக செய்திகள் வெளிவந்தன.
இன்று சோமாலியாவில் இயங்கி வரும் அல் சபாப் ஆயுததாரிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்க படைகள் இயங்கி வருகின்றன. சோமாலிய விசேட படையணிகளுக்கு அமெரிக்க படைகள் பயிற்சி அளித்து வருகின்றன. ஆப்கானிஸ்தானிய அனுபவங்களின் பின்பு இஸ்லாமிய ஆயுததாரிகளை முற்று முழுதாக அழித்து விட முடியாது என்ற முடிவுக்கு அமெரிக்க இராணுவ திட்டமிடல் தலைமைகள் வந்து விட்டன.
இதன் காரணமாக சோமாலியாவின் உள்நாட்டு சட்ட ஒழுங்கு பிரச்சினையையும் இஸ்லாமிய ஆயுதக்குழுக்களையும் சோமாலியாவே கவனித்துக்கொள்ள வேண்டும் என்றபுதிய நிலை உருவாகியுள்ளதுடன் கென்யாவுடன் அண்மையில் அமெரிக்கா செய்து கொண்டுள்ள புரிந்துணர்வுகளுக்கு ஏற்ப சோமாலியாவை கையாளும் தந்திரத்தில் மாற்றங்களை கொண்டு வருவதற்கான திட்டங்கள் புதிதாக வகுக்கப்பட்டு உள்ளன.
வழமைபோல் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் ஊடாக அல்லாது சோமாலியாவில் சட்டம், ஒழுங்கு நிலையை வழமைக்கு கொண்டு வருதல், நாட்டில் அரச கட்டமைப்புகளை உருவாக்குதல் ஊடாக உள்ளூர் நடவடிக்கைகளின் ஊடாகவே ஆயுததாரிகளை களைதல் என்ற வகையில் மூலோபாய திட்டமிடல்கள் வகுக்கப்பட்டு உள்ளன.
அதேவேளை, வடமேற்கு இந்து சமுத்திர பிராந்தியத்தின் பாதுகாப்பும் சர்வதேச நீண்ட தூர வர்த்தக பண்டங்களின் பாதையும் மிக முக்கியமாக கவனத்தில் கொண்டு வரப்பட வேண்டியதாகும். இந்தப் பிராந்தியம் உலகின் அனைத்து வல்லரசுகளினதும் கப்பல் போக்குவரத்து நிறுவனங்களினதும் பிரத்தியேக பொருளாதார வலயமாக கருதப்படுவதால் இந்த பிராந்தியத்திற்கு அனைத்து தரப்பினராலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
குறிப்பாக, கடல் சட்டத்தை பராமரித்தல், இதில் கப்பற் பாதைக்கான ஆழம் மிக்க ஒழுங்கைகளையும் அதன் தொடர்பாடல்களையும் பாதுகாப்பதிலும் அதித கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. 2001ஆம் ஆண்டிலிருந்து கடந்த பத்து ஆண்டுகளாக சோமாலிய ஆயுததாரிகள் கடற் கொள்ளையர்கள் என்ற பெயரில் பல கப்பல்களை தடுத்து நிறுத்தி பணம் பறிக்கும் , கொள்ளையடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால் இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான சர்வதேச நடவடிக்கைகளினால் சோமாலிய கொள்ளையர்கள் கடும் நெருக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு ஒழிக்கப்பட்டனர்.
இதற்கு முக்கிய காரணம் சர்வதேச நாடுகள் அனைத்திற்கும் இந்த பிராந்தியம் முக்கிய வலயமாக அமைந்ததே ஆகும். ஆனால், உள் நாட்டில் தமது மரபு ரீதியான பிரிவுகளிடையே காணப்படும் கடுமையான போட்டியும் ஊழலும் தவிர்க்க முடியாத வகையில் சோமாலியாவை சீரழித்து சிதறடித்து கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனமாகும்.
நன்றி வீரகேசரி