Paristamil Navigation Paristamil advert login

விடிந்ததும் சிரிக்கிறேன்

விடிந்ததும் சிரிக்கிறேன்

16 ஐப்பசி 2023 திங்கள் 09:29 | பார்வைகள் : 5881


விடிந்ததும் சிரிக்கிறேன்
அதுவரை அழுகிறேன்
ஆறாத துயரங்கள்
அணுவினில் கலந்திருக்கையில்
யாதும் அறியாமல் தவிக்கிறேன்
வினையூக்கியாய் இவ்விரவது
இருளினை ஊற்றுகையில்
கண்ணீரின் நிறங்கள் மாறுவதை
என் குறிப்பேட்டில் எழுதி கொள்கிறேன்

நேற்றுவரை தென்றல் என்றவை
இன்று முதல் பாதகமென்பதை
உணர்ந்ததால் சொல்கிறேன்

விடியும் வரை அழுகிறேன்

விழியினில் நிறைந்து
வெளிவருந் சிறு துளியின்
பாரமது ஒவ்வோர் நொடியிலும்
பெருகுவதை அறிகிறேன்

உறங்கும் விருட்சங்களுடன்
இருளின் மௌனங்களுடன்
கரைந்திட விரும்புகிறேன்
அதன் அலாதியான இன்பமே
இனி சூழ்வதை காண்கிறேன்

விடிந்ததும் சிரிக்கிறேன்,

இவ்வுலக நியதிக்குட்பட்டு
யாவையும் மறந்து….

வர்த்தக‌ விளம்பரங்கள்