திருமண பந்தத்தை வலுவாக்கும் அடிப்படை விதிகள்..!
16 ஐப்பசி 2023 திங்கள் 15:18 | பார்வைகள் : 2587
திருமணம் என்ற பயணத்தில் ஒவ்வொரு தம்பதியினரும் பின்பற்ற வேண்டிய அடிப்படையான சில விதிகள் உள்ளன. அப்படி திருமணமான தம்பதிகள் பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
குடும்பத்தின் பொருளாதாரத்தை எப்படி மேனேஜ் செய்வது என்பது பற்றிய ஒரு திட்டம் இருக்க வேண்டும். வருமானம் எவ்வளவு, செலவு எவ்வளவு மற்றும் முதலீடுகளுக்கு எவ்வளவு ஒதுக்கலாம் போன்ற விஷயங்களை இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசி முடிவு செய்ய வேண்டும். பெரிய அளவிலான செலவுகளை செய்வதற்கு முன்பு ஒருவரை ஒருவர் ஆலோசிப்பதும் அவசியம்.
வீட்டு வேலைகள் : வீட்டு வேலைகளை ஒருவரே முழுவதுமாக செய்வதற்கும் இருவரும் பகிர்ந்து செய்வதற்கும் வித்தியாசம் உண்டு. வேலைக்கு பணியாள் வைத்திருந்தாலும் ஒரு சில வேலைகளை வீட்டில் இருப்பவர்களே செய்ய வேண்டி இருக்கும். இது போன்ற சூழ்நிலையில் இருவரும் ஒருவருக்கொருவர் வேலைகளை பகிர்ந்து செய்வது உதவக் கூடும்.
கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் எவ்வளவு நேரத்தை ஒதுக்குகிறார்கள் என்பது மிகவும் முக்கியமான விஷயம். ஒருவருக்கொருவர் நன்றாக தெரிந்திருந்தாலும் கூட போதுமான அளவு நேரத்தை ஒன்றாக செலவழித்து மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசி விடுவது நல்லது.
குடும்பம் : குடும்பத்தையும், கணவன் மனைவி உறவையும் சமநிலையில் கொண்டு செல்வதற்கு ஒருவர் முயற்சிக்க வேண்டும். இதில் மாமனார் மற்றும் மாமியார் மற்றும் அவர்கள் சார்ந்த பொறுப்புகள் ஆகியவை அடங்கும். மாமனார் மற்றும் மாமியார் தனியாக வாழ்ந்தாலும் அவர்களை கவனித்துக் கொள்வது அவசியம். அரேஞ்டு மேரேஜ் விஷயத்தில் ஒருவரை ஒருவர் அறியாவிட்டாலும் அல்லது லவ் மேரேஜ் என்று வரும்போது ஒருவருக்கொருவர் நன்றாக பழக்கமானவர்களாக இருந்தாலும் பொறுப்புகள் இரண்டிலும் ஒன்றுதான்.
வாக்குவாதங்களை தவிர்க்கவும் : இருவரும் கடந்த காலம் சம்பந்தப்பட்ட வாக்குவாதங்களும் முடிந்த அளவு தவிர்த்து விடுங்கள். இது திருமண உறவை சீர்குலைத்து விடும்.
உங்கள் வாழ்க்கை துணையிடத்திலிருந்து எதையும் மறைக்க வேண்டாம் : இது உங்களது கடந்த காலம் பற்றிய ஒரு விஷயமாக இருந்தாலும் சரி அல்லது வேறு ஏதேனும் விஷயமாக இருந்தாலும் சரி அதனை தெரிந்து கொள்ள வேண்டிய உரிமை உங்கள் வாழ்க்கை துணைக்கும் உள்ளது. எந்த ஒரு விஷயத்தையும் மறைப்பது தேவையற்ற வாக்குவாதத்தையும், உறவு முறிந்து போவதற்கு கூட வழிவகுக்கலாம். உங்கள் வாழ்க்கை துணையிடம் பொய் சொல்வதை தவிர்த்து விடுங்கள்.
ஒரு அழகான திருமண வாழ்க்கையில் கணவன் மனைவி ஆகிய இருவரும் சிறு சிறு வாக்குவாதங்களில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து தவறுகளை மன்னித்து விட வேண்டும். ஒரு வாக்குவாதத்தில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது முக்கியமே அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.