மின் கட்டணத்தை குறைக்க கோரி 10,000 பேர் உண்ணாவிரத போராட்டம்
17 ஐப்பசி 2023 செவ்வாய் 13:00 | பார்வைகள் : 2907
மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, தமிழக தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர், சென்னை எழும்பூரில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அதில், 10,000க்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர். காலை துவங்கிய உண்ணாவிரத போராட்டம் மாலை நிறைவடைந்தது.
பின், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறியதாவது:
மின்சார நிலை கட்டணத்தை குறைப்பது, உச்ச நேர மின் கட்டணத்தை ரத்து செய்வது உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம், 26ம் தேதி கதவடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. உடனே, அமைச்சர்கள் அன்பரசன், ராஜா பேச்சு நடத்தி, மூன்று நாட்களில் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்தனர்.
அதிகாரிகள் பேச்சு நடத்திய போது, ஒரு கோரிக்கை மட்டுமே ஏற்கப்பட்டது. மற்ற நான்கு கோரிக்கைகளும் ஏற்கப்படாததை கண்டித்து, சென்னையில், 10,000 பேர் உண்ணாவிரதம் இருந்துள்ளனர்.
இனியும் கோரிக்கையை நிறைவேற்றவில்லை எனில், நவ., 6ல் அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும், மாவட்டங்களில் உள்ள தொழில் துறையினர் சந்தித்து சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர கோரி மனு அளிக்கப்படும்.
டிச., 4ல், தொழில் முனைவோர்கள், தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் இணைந்து, அனைத்து மாவட்டங்களிலும் மனித சங்கிலியும்; 18ல், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டமும் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.