Paristamil Navigation Paristamil advert login

தாய் மகளிடம் எதை பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்?

தாய் மகளிடம் எதை பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்?

14 ஐப்பசி 2023 சனி 14:49 | பார்வைகள் : 4768


மகள் பத்து வயதை தாண்டும்போது மெல்ல மெல்ல தாயிடம் இருந்து விலகுகிறாள். பெரும்பாலான வீடுகளில் அந்த விலகல் இல்லை என்றாலும் பல குடும்பங்களில் தாய்க்கும் மகளுக்கும் இடையே பெரிய இடைவெளி விழுந்துவிடுகிறது. அம்மாவிடம் மகள் ‘என் பள்ளிக்கூட நண்பர்களில் சில மாணவர்களும் இருக்கிறார்கள். அவர்களிடமும் நான் நட்பு கொண்டிருக்கிறேன்..’ என்று சொன்னால், பெரும்பாலான அம்மாக்கள் உடனே, ‘ஏய்.. அதெல்லாம் கூடவே கூடாது. ஆண்களோடு நட்புவைப்பது நல்ல பழக்கம் இல்லை’ என்று சொல்வார்கள். அது மகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.

இதுபோன்ற கருத்து வேறுபாடுகள்தான் தாய்-மகள் விலகலுக்கு காரணமாக இருக்கின்றன. அந்த விலகல் ஏற்படாமல் இருக்க என்ன செய்யவேண்டும்? ‘உன்னுடன் படிக்கும் மாணவர்களோடு நீ நட்பு கொள்வதில் தப்பில்லை. ஆனால் நட்பு கொள்வது ஆணிடம் என்றாலும், பெண்ணிடம் என்றாலும் நீ தெளிவாக இருக்கவேண்டும் என்று கூறி ஆதரவும், விழிப்புணர்வும் ஊட்டவேண்டும். இப்படி தாய் சொன்னால், மகள் ‘அம்மா நமக்கு ஆண் நண்பர்களிடம் பேச சுதந்திரம் கொடுத்திருக்கிறார். அந்த சுதந்திரத்தை நாம் எல்லை மீறாமல் பயன்படுத்தவேண்டும்’ என்று நினைப்பாள், தாய்மீது மதிப்பும் கொள்வாள்.

தாய்க்கு ஆண், பெண் என இரு குழந்தைகள் இருந்தால், வேறு மாதிரியான பிரச்சினைகள் எழுகின்றன. மகள், அம்மாவிடம் ‘அம்மா நீ அவனை இஷ்டம்போல் நடந்துகொள்ள அனுமதிக்கிறாய். நினைத்த நேரம் வெளியே செல்ல அனுமதி கொடுக்கிறாய். எனக்குத்தான் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கிறாய்’ என்பாள். அதற்கு பெரும்பாலான அம்மாக்கள், நீ பெண், அடக்க ஒடுக்கமாக நடக்கவேண்டும்’ என்பார்கள். எல்லா பெண்களையும் இந்த பதில் எரிச்சலூட்டும். அவள் பெண்ணாக பிறந்ததை குற்றமாக சொல்வதுபோல் அமைந்துவிடும். அதற்கு பதிலாக, நீ பெண்ணாக பிறந்ததால் அடங்கி ஒடுங்கி இருக்கவேண்டியதில்லை. உன்னிடம் இருக்கும் திறமையை நீ வெளிக்காட்டு என்று கூறி ஊக்குவிக்கவேண்டும்.

பெண்களுக்கு சில அம்மாக்கள் கண்காணிப்பு வளையம் போட்டுவிடுகிறார்கள். தங்கையை பின்தொடர்ந்து அண்ணன் கண்காணிப்பான். இதனால் மகள் கோபம் கொள்வாள். அவன் உன் அண்ணன். நீ ஏதாவது தப்பு செய்தால் அவனும் சேர்ந்துதான் பாதிக்கப்படுவான். அதனால் நீ சரியான வழியில் சென்று கொண்டிருக்கவேண்டும் என்பதற்காக அவன் உன்னை பின் தொடர்கிறான். அது அவன் கடமை’ என்று தாய் பேசி, மகளின் கோபத்தை அதிகரிக்கச் செய்து விடுகிறார்கள். அதற்கு பதிலாக, ‘உன் அண்ணனோ, தம்பியோ யாரும் உன்னை பின்தொடர்ந்து வந்து எந்த பலனும் இருக்கப்போவதில்லை. உன்னை உன்னால் மட்டுமே பாதுகாக்க முடியும். அதனால் நீதான் எப்போதும் விழிப்போடு இருக்கவேண்டும் என்று தான் கூறவேண்டும்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்