மற்ற கட்சிகள் மதிக்க வேண்டுமானால் காங்கிரசை பலப்படுத்துங்கள்: சோனியா
14 ஐப்பசி 2023 சனி 17:21 | பார்வைகள் : 2764
தமிழக காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை பெற வேண்டும் என்றால், கட்சி கட்டமைப்பு வலிமையாக இருக்க வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் முன்னணி நிர்வாகிகளுக்கு, சோனியா அறிவுரை வழங்கியுள்ளார்.<br><br>தி.மு.க., மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்க, நேற்று முன்தினம் இரவு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, பொதுச்செயலர் பிரியங்கா ஆகியோர் சென்னை வந்தனர்.
முதல்வர் ஸ்டாலின், தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி, பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் உதயநிதி, நேரு, பொன்முடி உள்ளிட் டோர் வரவேற்றனர்.
வரவேற்பு
பின், கிண்டியில் உள்ள ஐ.டி.சி., கிராண்ட் சோழா ஓட்டலில், சோனியா, பிரியங்கா இருவரும் தங்கினர். நேற்று பகலில், ஓட்டலின் மூன்றாவது மாடியில் உள்ள ராஜேந்திரா ஹாலில், தமிழக காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள், 67 பேருடன், சோனியாவும் பிரியங்காவும் ஆலோசனை நடத்தினர்.
நண்பகல் 12:00 மணிக்கு துவங்கிய கூட்டம், மதியம் 1:00 மணிக்கு முடிவடைந்தது.
கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் செயலர் சி.டி.மெய்யப்பன் பேசுகையில், 'மாநில தலைமையில் மாற்றம் உண்டா, இல்லையா என்ற குழப்பம் நீடிப்பதால், முன்னணி தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்படாமல் பிரிந்து செயல்படுகின்றனர். இதனால், கட்சி அமைப்புக்கு பின்னடைவு ஏற்படுகிறது' என்றார்.
அகில இந்திய காங்கிரஸ் செயலர் விஸ்வநாதன், 'கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணத்தை ராகுல் மேற்கொண்ட பின், அவரது செல்வாக்கு தேசிய அளவில் உயர்ந்துள்ளது.
'இளம்பெண்கள், இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இண்டியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவிக்க வேண்டும்' என்றார்.
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலர் ஹசீனா சயீது, ''பெண்களுக்கு, 33 சதவீதம் இட ஒதுக்கீட்டை, கட்சியில் அமல்படுத்த வேண்டும். பிரியங்காவை தமிழக பெண்கள், இளைய இந்திராவாக கருதுகின்றனர். எனவே, அவர் அடிக்கடி வந்தால், இளம் பெண் வாக்காளர்களை ஈர்க்க முடியும்,'' என்றார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, ''தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ளது. பூத் கமிட்டி பணிகள் முடிவடைந்த லோக்சபா தொகுதிகள் வாரியாக, மாநாடுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. கூட்டணி பலமாக இருக்கிறது,'' என்றார்.
தமிழக சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி போன்றவர்கள், 'தமிழக காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். அதற்கு மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என வலியுறுத்தினர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியை மாற்ற வேண்டும் என்பதை, மறைமுகமாக சுட்டிக்காட்டி பேசினர்.
பேச வேண்டாம்
பின்னர், சோனியா பேசியதாவது:
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். அனைவரும் ஒன்றாக இணைந்து, கடுமையாக உழைக்க வேண்டும். லோக்சபா தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.
கடந்த கால நிகழ்வுகள் குறித்து, பேச வேண்டாம். கட்சி வளர்ச்சி பணிகள், எதிர்கால பணிகள் குறித்து மட்டும் பேசுங்கள்.
நாங்கள் மாவட்ட தலைவர்களை நியமிக்கவில்லை எனக் கூறுகிறீர்கள். ஆனால், மாவட்ட தலைவர்கள் நியமித்த மாவட்டங்களில், கட்சியின் கட்டமைப்பு பலமாக இருக்கிறதா?
காங்கிரசை பலப்படுத்தினால்தான் மற்ற கட்சிகள் மதிக்கும். கூட்டணியில் அதிக தொகுதிகளை பெற வேண்டும் என்றால், கட்சி பலமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அடிக்கடி வருவேன்
தமிழகத்திற்கு நீங்கள் எத்தனை முறை அழைத்தாலும், நான் வருவதற்கு தயாராக இருக்கிறேன். அதே சமயம், நீங்களும் மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களுடன் நல்ல முறையில் தொடர்பு வைத்திருந்து, கட்சிக்காக செயல்பட வைக்க வேண்டும். கட்சி பலம் பெற, வளர்ச்சி பெற, ராகுலும், நானும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்' என்றார்.
பிரியங்கா,
காங்., பொதுச் செயலர்