புளி அவல்
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10336
அலுவலகத்திற்கு செல்வோர் காலையில் பெரும்பாலும் சாப்பிடவேமாட்டார்கள். மிகவும் முக்கியமான காலை உணவை சாப்பிடாமல் சென்றால், நாள் முழுவதும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். ஆகவே காலையில் சிம்பிளாக செய்யக்கூடிய ஏதேனும் ஒன்றை சமைத்து சாப்பிட வேண்டியது அவசியம். அப்படி காலையில் 5 நிமிடங்களில் செய்யக்கூடிய ஒரு ரெசிபி தான் புளி அவல். இந்த ரெசிபி ஆரோக்கியமானதும் கூட. சரி, இப்போது அந்த புளி அவலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
அவல் - 1 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கெட்டியான புளிச்சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
பச்சை மிளகாய் - 1
வறுத்த வேர்க்கடலை - 2-3 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
முதலில் ஒன்றிற்கு இரண்டு முறை அவலை நீரில் போட்டு நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் மஞ்சள் தூள், புளிச்சாறு, உப்பு சேர்த்து ஸ்பூன் கொண்டு பிரட்டி விட வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் அவலை சேர்த்து, வேண்டுமானால் உப்பு தூவி 3 நிமிடம் நன்கு பிரட்டி இறக்கினால், புளி அவல் ரெடி!!!