புட்டின் திறந்த போர்முனை
18 ஐப்பசி 2023 புதன் 09:49 | பார்வைகள் : 2807
இஸ்ரேல் – பலஸ்தீனப் போர், பலத்த அதிர்வலைகளை சர்வதேச மட்டத்திலும், பிராந்திய மட்டத்திலும் ஒடுக்கு முறைக்கு எதிராக போராடும் இனங்களின் தேசிய மட்டங்களிலும் ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்கால பனிப்போரின் விளைவுகள் தான் இவை. இப்போர் சர்வதேச அரசியலின் போக்கை துலாம்பரமாக வெளிக்காட்டியுள்ளது. அமெரிக்கா கட்டியெழுப்பிய ஒரு மைய உலகம் சரிந்து போவதற்கான அடையாளம் இது வெனலாம்.
இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் இரு மைய உலகம் தோற்றம் பெற்றது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர் ஒரு மைய உலகமாக மாறியது. பிராந்திய வல்லரசுகளின் எழுச்சிக்குப் பின்னர் இது பல மைய உலகமாக மாறி அதன் வளர்ச்சிப் போக்கில் இது இரு அணி மைய உலகமாக மாறியுள்ளது. இரு தலைமை , ஒரு தலைமை என்பன கூட்டுத்தலைமையாக மாற்றம் பெற்றுள்ளது. பல மைய அதிகாரத்தின் நலன்களே இரு கூட்டு அணித்தலைமைகளை உருவாக்கியுள்ளது.
அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம், ஜப்பான், அவுஸ்ரேலியா என்பன ஒரு கூட்டு அணியாக உள்ளன. மறு பக்கத்தில் ரஷ்யா, சீனா, வடகொரியா ஈரான், சிரியா என்பன ஒரு கூட்டு அணியாக உள்ளன. தற்போது இதற்குள் சில ஆபிரிக்க நாடுகளும் அடக்கம். இதற்கான சூழலையும் நிர்ப்பந்தத்தையும் ரஷ்ய – உக்ரேன் போர் உருவாக்கி விட்டது.
ரஷ்யாவின் கொல்லைப்புறத்தில் அமெரிக்க அணி ஆக்கிரமிப்பு செய்ய முற்பட்ட போதே ரஷ்ய – உக்ரேன் போர் ஏற்பட்டது. தற்போது புட்டின் அமெரிக்காவின் கொல்லைப்புறத்தில் போர் முனையைத்திறந்திருக்கின்றார். பலஸ்தீன -– இஸ்ரேல் பிரதேசம் அமெரிக்காவிற்கு வெகு தொலைவில் இருந்தாலும் அமெரிக்கா நலன்களைப் பொறுத்தவரை இப்பிரதேசம் அமெரிக்காவின் கொல்லைப்புறம் தான்.
அமெரிக்காவின் உள்ளக கட்டமைப்பில் யூதர்களின் ஆதிக்கம் அதிகம். அவர்களின் நலன்களை புறக்கணித்து விட்டு அரச அதிகார கட்டமைப்பை சிறப்பாக மேற்கொள்ள முடியாது. வெளியக நலனைப் பொறுத்த வரை மத்திய கிழக்குப் பிராந்தியம் அமெரிக்காவுக்கு முக்கியமானது. கேந்திர நலன்களும் பொருளாதார நலன்களும் அங்கு இருக்கின்றன. இஸ்ரேல் –- பலஸ்தீன பிரதேசம் கேந்திர அடிப்படையில் முக்கியமான பிரதேசம். ஆசிய – ஐரோப்பிய – ஆபிரிக்க கண்டங்களுக்கு மத்தியில் அது இருக்கின்றது. இதன் மூலம் உலக அதிகார சமநிலையை பேணுவதிலும் முக்கிய இடத்தை வகிக்கிறது.
பொருளாதார நலன்களைப் பொறுத்தவரை மத்திய கிழக்கு எரிபொருளுக்கான தங்கச் சுரங்கம். அமெரிக்காவின் எண்ணெய் கம்பனிகள் அங்கு வலுவாக காலூன்றி உள்ளன. இவற்றையெல்லாம் நீண்ட காலத்திற்கு பாதுகாக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு உண்டு.
மத்திய கிழக்கின் இஸ்லாமிய நாடுகளுடனான உறவு எப்போதும் ஏற்ற, இறக்கத்திற்கு உள்ளாகக் கூடியவை. அந்த ஏற்ற இறக்கத்தை சமநிலைப்படுத்தக்கூடிய அதிகார பலம் ஒன்று அமெரிக்காவுக்கு மட்டுமல்ல மேற்குலகத்திற்கும் தேவைப்பட்டது. தவிர குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு 2 ஆம் உலக யுத்தத்தின் பின்னர் தமது நாடுகளில் ஏற்பட்ட யூத நெருக்கடிக்கும் தீர்வு காண வேண்டியிருந்தது. இந்த நலன்கள் ஒன்று சேர்ந்து தான் இஸ்ரேல் என்ற யூத நாடு உருவாக்கப்பட்டது. வல்லரசுகளின் உதவியுடன் அதன் இராணுவ பலம் அபரிதமாக வளர்க்கப்பட்டது.
யூதர்களிடம் இயல்பாகவே உள்ள ஆற்றல்களும், யூத தேச வாதமும் இதனை ஊக்குவித்தன. இஸ்ரேல் என்ற நாடு உருவானதை தொடர்ந்து அரபு நாடுகள் பல யுத்தங்களை இஸ்ரேலில் மேற்கொண்டன. அவை எல்லாம் தோல்வியில் முடிவடைந்தன. யுத்த வெற்றியைச்சாட்டாக வைத்து பலஸ்தீனத்தின் நிலங்களையும் வெகுவாரியாக அபகரித்துக் கொண்டது. பலஸ்தீன மக்கள், மேற்குக் கரை காஸா என்கின்ற சிறிய நிலப்பகுதிக்குள் சுருக்கப்பட்டனர்.
இராணுவ ரீதியாக இஸ்ரேல் அணு ஆயுதங்களையும் உள்ளடக்கிய பலமான நாடாக இருப்பதனால் சூழவுள்ள அரபு நாடுகள் இஸ்ரேலுடன் மோதுவதற்கு அச்ச நிலையில் உள்ளன. போரில்லா இணக்கப்பாட்டு நிலைக்கே செல்ல முயற்சிக்கின்றன. எல்லைப்புற நாடுகளான எகிப்தும், ஜோர்தானும் இதில் மிக எச்சரிக்கையாக உள்ளன 'கேம்ப் டேவிட்' ஒப்பந்தத்திற்கு இந்த அச்சத்திலேயே அவை உடன்பட்டுச் சென்றன. தற்போது எல்லை நாடுகளில் லெபனானும் சிரியாவும் மட்டுமே சற்று தள்ளியுள்ளன.
பலஸ்தீன அகதிகள் லெபனானில் அதிகமாக இருப்பதால் லெபனான் இஸ்ரேலுடன் நெருங்குவதில் தடைகள் உண்டு. தவிர பலஸ்தீனம் சார்ந்த ஹிஸ்புல்லா இயக்கமும் அங்கு பலமாக இருக்கின்றது. சிரியாவுக்கு 'கோலான்குன்று' தகராறு இஸ்ரேலுடன் உண்டு. கோலான்குன்று பிரதேசத்தை இஸ்ரேல் கைப்பற்றி வைத்திருக்கின்றது. இதை விட சிரியாவில் ஈரான் சார்பு ஆட்சியே அதிகாரத்தில் உள்ளது. இவையும் நெருங்கிச் செல்வதில் தடைகளை ஏற்படுத்துகின்றது.
முன்னர் அரபு தேசியவாதிகளான சதாம் ஹுசைனும், கடாபியும் அமெரிக்க –மேற்குலக - இஸ்ரேல் கூட்டு ஆதிக்கத்திற்கு தடையாக இருந்தனர். அத்தடையை அகற்ற வேண்டும் என்பதற்காகவே அவர்கள் அழிக்கப்பட்டனர். தற்போது இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களே தடையாக இருக்கின்றன.
குறிப்பாக, மத்திய கிழக்குப் பிரதேசங்களில் தேசியவாதிகள் பலவீனமாகி உள்ளனர். பலஸ்தீனத்தின் மேற்கு கரைப் பிரதேசம் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கின்றது. எனினும் பலமான நிலையில் இருக்கிறது என கூற முடியாது. அதிகளவில் இஸ்ரேலுடன் இணங்கிப் போரும் அரசியலையே அது பின்பற்றப் பார்க்கிறது. ஆனால், அதனை திருப்திப்படுத்தும் நிலையிலும் இஸ்ரேல் இல்லை. ஏறத்தாழ இலங்கை அரசை ஒத்தநிலை தான்.
தற்போதைய யுத்தம் எத்திசை நோக்கிச் செல்லும் என இப்போதைக்கு உறுதியாக கூற முடியாது. இதில் அமெரிக்க – மேற்குலக இஸ்ரேல் கூட்டின் வியூகம் காஸாவில் ஹமாஸ் இயக்கத்தின் ஆதிக்கத்தை அகற்றுவது தான். இதன் மூலம், காஸா மக்களை சிதைந்த இனக் குழுவாக மாற்றுவது தான்.
விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்தை அகற்றியது போன்ற முயற்சிகளில் இறங்கக் கூடும். இந்த அகற்றுதல் தமது நிகழ்ச்சி நிரலை நகர்த்துவதற்கு இலங்கைத் தீவில் பெரிய வெற்றியை வல்லரசுகளுக்கு கொடுக்கவில்லை என்பது வேறு கதை. புலிகள் இல்லாநிலை தெற்காசியா தொடர்பாக குறிப்பாக இலங்கைக் தீவு தொடர்பான அதிகாரச் சமநிலையை வெகுவாக குழப்பியிருக்கிறது.
விடுதலைப் புலிகளைப் போல ஹமாஸ் இயக்கத்தின் ஆதிக்கத்தை அகற்றுவது இலகுவாக இருக்கப் போவதில்லை. விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச பலம் இருக்கவில்லை. எந்த ஒரு நாடும் புலிகளுக்கு ஆதரவாக இருக்கவில்லை ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான பனிப்போர் காலமும் இருக்கவில்லை.
இந்தியா மிகப் பெரும் தடைக்கருவியாக இருந்தது. ஆனால் ஹமாஸ் இயக்கத்திற்கு சர்வதேச பலம் உண்டு. ஹமாஸ் இயக்கத்தை அவ் இயக்கத்தினால் பாதுகாக்க முடியாவிட்டாலும் ரஷ்யா , சீனா, ஈரான் , வடகொரியா சிரியா என்பன பாதுகாக்கவே முயற்சிக்கும், ஹமாஸ் இயக்கம் ஒரு மதம் சார்பான இயக்கமாகவும் அதே வேளை பலஸ்தீன் தேசிய இயக்கமாகவும் இருப்பதால் மக்கள் ஆதரவும் நிறையவே உண்டு. பலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கு இத்தகைய ஆதரவு இல்லை. அது போராட்ட அரசியலிலும் தற்போது முனைப்புக் காட்டுவதில்லை.
இங்கு ஒரு புதிய வளர்ச்சி உருவானதையும் கோடிட்டு காட்ட வேண்டும். பரம எதிரியாக விளங்கிய ஷியா முஸ்லிம் அமைப்புகளுக்கும், சுனி முஸ்லிம் அமைப்புகளுக்கும் இடையே ஒருங்கிணைவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இதற்கான பிள்ளையார் சுழியை சீனாவின் முயற்சியால் சவூதிக்கும் , ஈரானுக்குமிடையே போடப்பட்டு விட்டது. ஷியா, சுனி முஸ்லிம் முரண்பாடுகள் இருக்கும் வரை மத்திய கிழக்கு நாடுகளை ஒருங்கிணைந்த செயற்பாட்டிற்குள் கொண்டுவர முடியாது. இந்த ஒருங்கிணைப்பு சீன-– ரஷ்ய வியூகத்தின் வெற்றி என்றே கூற வேண்டும்.
ரஷ்ய அதிபர் புட்டின் வெளிநாடுகளில் ரஷ்யாவின் நலன்களைப் பேணுவதற்காக தனியார் படைகளை உருவாக்கியிருந்தார். சிரிய யுத்தத்திலும் , உக்ரேன் யுத்தத்திலும் அப்படை பயன்படுத்தப்பட்டது. அவ்வாறான படைகளை இங்கும் பயன்படுத்த முற்படலாம். இதை விட மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய ஆயுத இயக்க கங்கங்களுக்கு தேவையான ஆயுதங்களை வழங்கி அவற்றைப் பலப்படுத்தும் முயற்சியிலும் ரஷ்யா இறங்கலாம். மத்திய கிழக்கு நாடுகளும் தம் பங்கிற்கு தேவையான உதவிகளை வழங்கப் பார்க்கும்.
பலஸ்தீனம் முழுமையாக அழிக்கப்படுவதை சூழவுள்ள முஸ்லிம் நாடுகள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. அந்த நாடுகளை முழுமையாகப் பகைத்துக் கொண்டு அல்லது முழுமையாக ரஷ்ய அணியிடம் தள்ளி விட்டு, அமெரிக்க அணி தன்னுடைய நலன்களை அங்கு பேண முடியாது.
இஸ்லாமிய நாடுகளின் தலைமைகள் அமெரிக்க அணியுடன் இணங்கிப் போனாலும் அந் நாட்டு மக்கள் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவே இருப்பர். ஏற்கனவே இஸ்லாமிய நாடுகளின் கூட்டு இப்போருக்குப் பின்னர் இஸ்ரேலுடனான உறவுகளிலிருந்து விலகியிருக்கிறது. அண்மைக் காலத்தில் அமெரிக்கா மிகச் சிரமப்பட்டு இந்த உறவுகளை ஏற்படுத்தியிருந்தது. குறைந்த பட்சம் பலஸ்தீனம், இஸ்ரேல் என்கின்ற இருநாட்டுக் கோட்பாட்டிற்கு வராமல் மத்திய கிழக்கில் அமைதியைக் கொண்டு வர முடியாது. ஆனால் அந்த நிலையை நோக்கி நகர்வதற்கு இஸ்ரேல் இன்னமும் தயார் நிலையைக் காட்டவில்லை.
இப் போரினால் ஏற்பட்ட முதலாவது வெற்றி ரஷ்ய அதிபர் புட்டினுக்குரியது. இன்னொரு போர் முனையை திறந்ததன் மூலம் ரஷ்ய மீதான அழுத்தத்தை அவர் குறைத்திருக்கின்றார். உக்ரேன் தான் கைவிடப்பட்ட நிலைக்கு வந்திருக்கிறது. 'அரசனை நம்பி புருசனை கைவிட்ட நிலை' அதற்கு. உக்ரேனா, இஸ்ரேலா என்ற நிலை வந்தால் இஸ்ரேலை தான் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் தேர்ந்தெடுக்கும். இஸ்ரேலுக்கு யுத்தக்கப்பலை அனுப்பியது போல உக்ரேனுக்கு அமெரிக்கா யுத்த கப்பலை அனுப்பவில்லை.
ரஷ்யா மேலும் மேலும் போர் முனைகளைத் திறக்க முற்படலாம். தாய்வான், தென்கொரியா, ஆபிரிக்க நாடுகள் என போர் முனைகளைத் திறப்பதற்கு ஏராளமான இடங்கள் உண்டு. பனிப்போர் என்று வந்து விட்டால் விடுதலைப் போராட்ட சக்திகளுக்கும் வலுவான இடம் கிடைக்கும்.
தமிழ் மக்கள் இஸ்ரேல் –- காஸா போரிலிருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய விடயங்கள் உண்டு. அதில் ஒன்று என்ன நெருக்கடிகள் வந்தாலும் தொடர்ச்சியாக போராடுவதாகும். பலஸ்தீன மக்கள் 65 வருடங்களுக்கு மேலாக போராடிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் இழந்தவைகள் ஏராளம். எனினும் போராட்ட முனைப்பை இன்னமும் கை விடவில்லை. காலத்திற்கு காலம் தமக்கான வெளிகளைக் கண்டுபிடித்து அதற்கூடாக தமது இருப்பை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பலஸ்தீன பிரச்சினையும் தமிழ் மக்களின் பிரச்சினையும் ஒரே மாதிரியானவையே. இரண்டும் தேசியப் பிரச்சினைகளே. குடியேற்றம் பிரதான ஒடுக்கு முறைக் கருவியாக அங்கும் இங்கும் பயன்படுத்தப்படுகின்றது. காஸாவுக்குள்ளும் மேற்குக்கரைக்குள்ளும் பலஸ்தீன மக்கள் சுருக்கப்பட்டது போல இங்கும் சுருக்கம் நிகழ்கின்றது.
பனிப்போர் காலம் தொடர்வதற்கே வாய்ப்புக்கள் உண்டு. அது தமிழ் மக்களுக்கும் பல சர்வதேச வெளிகளைத் திறந்து விடும். இவற்றை உரிய வகையில் பயன்படுத்த தமிழ் மக்கள் தவறக் கூடாது. இந்தியா நடுக்கோட்டில் இருக்கும் வரை வாய்ப்புக்கள் குறைவாக இருக்கலாம் எனினும் முயற்சிகளை செய்துகொண்டிருக்க வேண்டும்.
இந்தியா பிராந்திய நலன்களுக்காக அமெரிக்காவுடன் கூட்டுச்சேர வேண்டிய கட்டாயம் உண்டு. பூகோள நலன்களுக்காக ரஷ்ய அணிப்பக்கம் இருக்க வேண்டிய தேவையும் உண்டு. எனினும் இந்தியாவிற்குள் நாம் வெளிகளைத் தேட வேண்டும்.
ஒருங்கிணைவு அரசியல் தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியம் நெருக்கடிக் காலங்களில் பலஸ்தீனத்திற்காக முஸ்லிம் உலகம் ஒருங்கிணைவைக் காட்டி வருகிறது.
தற்போதைய தேவை காழ்ப்பு ரீதியான விமர்சனங்கள் அல்ல. தேவையான பாடங்களைக் கற்றுக் கொள்வதே.
புதிய , புதிய விடயங்கள் அரங்கிற்கு வந்துள்ளமையால், தூக்கத்தில் இருக்கும் தமிழ்த்தரப்பை தட்டி எழுப்பும் மார்க்கங்கள் பற்றி எழுத முடியவில்லை அடுத்தடுத்த வாரங்களில் அவற்றிற்கு முயற்சிப்போம்.
நன்றி வீரகேசரி