லெபனான் நாட்டுக்கு பயண எச்சரிக்கை விடுத்த பிரபல நாடுகள்
19 ஐப்பசி 2023 வியாழன் 07:22 | பார்வைகள் : 2589
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் முழு பிராந்தியத்திலும் பரவும் சூழல் காணப்படுவதாக அச்சம் எழுந்துள்ளது.
அதனால் அமெரிக்காவும் பிரான்சும் லெபனானுக்கான அனைத்து பயணங்களுக்கும் எதிராக தங்கள் குடிமக்களை எச்சரித்துள்ளது.
தெற்கு லெபனானில் இருந்து செயல்படும் ஈரானிய ஆதரவு போராளிக் குழுவான ஹிஸ்புல்லா சமீப நாட்களாக எல்லையில் இஸ்ரேல் ராணுவத்துடன் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது.
ஹமாஸ் படைகளுக்கு எதிராக காஸா மீது முப்படை தாக்குதலை முன்னெடுக்க இஸ்ரேல் தயாராகி வரும் நிலையில், ஹிஸ்புல்லா விவகாரம் இன்னொரு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.
அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகள் முன்னெடுத்த அதிரடி தாக்குதலை அடுத்து, இதுவரை இஸ்ரேல் தரப்பில் 1,300 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், பாலஸ்தீன மக்கள் 3,000 பேர்கள் வரையில் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையிலேயே லெபனானில் எவரும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்கா தமது குடிமக்களை எச்சரித்துள்ளது. இதற்கிடையில், புதன்கிழமை பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
லெபனானுக்கான அனைத்து பயணங்களுக்கும் எதிராக அறிவுறுத்தியது.
மேலும் தேவையற்ற பயணங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
இதனிடையே, தேவையற்ற பயணங்களை தவிர்க்க கோரியுள்ள கனடா நிர்வாகம், இக்கட்டான சூழலில் குடிமக்களை வெளியேற்றுவது உட்பட தீவிர மோதலின் போது தூதரக சேவைகளை வழங்க கனடா அரசாங்கத்தால் முடியாமல் போகலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மட்டுமின்றி, லெபனானில் உள்ள தனது குடிமக்களிடம் வணிக விமானங்கள் செயல்பாட்டில் இருக்கும்போதே நாட்டை விட்டு வெளியேறுமாறு கனடா கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.