இலங்கை கிரிக்கெட் அணி தவறுகளை கற்றுக்கொள்ள வேண்டும்
19 ஐப்பசி 2023 வியாழன் 09:24 | பார்வைகள் : 2695
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோல்வி அடையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும், தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சாக்குப்போக்கு சொல்வது பல தசாப்பதங்களாக தொடர்ந்துகொண்டே போகிறது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக லக்னோவில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மோசமான துடுப்பாட்டம் காரணமாக இலங்கை தோல்வி அடைந்தது.
அதன் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய இலங்கையின் ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க 'எமது கவனம் எல்லாம் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதாகும்' என தெரிவித்திருந்தார்.
ஆனால், இலங்கை அணி எப்போது கற்றுக்கொள்ளப்போகிறது என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வியாகும்.
இலங்கை வீரர்கள் எத்தனை வருடங்கள்தான் சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்லிக்கொண்டிருக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை?
போகின்ற போக்கைப் பார்த்தால் நெதர்லாந்தை இலங்கை வெற்றிகொண்டால் 2023 உலகக் கிண்ணத்தில் அதுவே மிகப்பெரிய தலைகீழ் முடிவாக அமையும் என்ற கருத்து இப்போது நிலவ ஆரம்பித்துவிட்டது.
இலங்கை வீரர்கள் எந்தவொரு போட்டியையும் திட மனதுடன் எதிர்கொள்ளாததன் காரணமாகவே தவறுகள் இழைப்பதற்கு முக்கிய காரணமம்.
ஒவ்வொரு போட்டிக்கும் ஏற்றவாறு தங்களைத் தயார்படுத்திக்கொள்வதும் அரங்கினுள் நுழைந்தவுடன் ஆட்டத்தின் தன்மைக்கேற்ப தங்ககளை சரி செய்துகொள்வதும் வீரர்களின் கடமையாகும், ஆனால், இலங்கை வீரர்கள் தமக்கு உள்ள பொறுப்பை மறந்து ஏனோதானோ என துடுப்பெடுத்தாடுவதும் இலக்குகளை நோக்கி பந்துவீசத் தவறுவதும் இலங்கை அணி தோல்வி அடைவதற்கு காரணமாகவிடுகிறது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 21.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 125 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் இருந்த இலங்கை அடுத்த 22 ஓவர்களில் 10 விக்கெட்களை இழந்து 84 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
துடுப்பாட்ட வீரர்கள் போட்டியின் தன்மைக்கேற்ப தங்களை சரிசெய்துகொள்ளாமல் எப்போதும்போல எதிரணியினரின் பந்துவச்சுகளை சரியாக புரிந்துகொள்ளாமல் விசுக்கி அடிக்க விளைந்து விக்கெட்களைத் தாரைவாத்ததால் இலங்கை தோல்வி அடைந்தது.
இது இவ்வாறிருக்க, தென் ஆபிரிக்காவை வெற்றிகொண்ட பின்னர் 'ஒவ்வொரு போட்டியையும் சரியான திட்டங்களுடனும், போட்டியில் வெற்றிபெறுவதற்கான வழிவகைகளுடனும் நாங்கள் எதிர்கொள்கிறோம். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் அதிசிறந்த கிரிக்கெட்டை விளையாடுவது மட்டுமே எங்களது குறிக்கோள். போட்டி நடைபெறும் நாளில் நாங்கள் சிறப்பாக விளையாடினால், எந்த அணியையும் வீழ்த்த முடியும் என்று நாங்கள் கருதுகிறோம் என நெதர்லாந்து அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் குறிப்பிட்டார்.
இதனை இலங்கை வீரர்கள் ஒரு படிப்பினையாக எடுத்துக்கொண்டு அடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றிபெற முயற்சிக்கவேண்டும் என்பதே இலங்கை இரசிகர்களினது எதிர்பார்ப்பாகும்.