அமெரிக்காவில் 6 வயது பாலஸ்தீன சிறுவனை கொன்ற முதியவர்! அதிர்ச்சி தகவல்
17 ஐப்பசி 2023 செவ்வாய் 09:22 | பார்வைகள் : 4551
அமெரிக்கா சிகாகோவில் இருந்து தென்மேற்கே 65 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பகுதியில் 32 வயது முஸ்லிம் பெண் தனது 6 வயது மகனுடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் வீட்டில் இருந்தனர்.
அப்போது 71 வயது முதியவர் ஒருவர் வீட்டுக்குள் கத்தியுடன் புகுந்தார்.
திடீரென அவர் அந்த பெண்ணையும், அவரது மகனையும் வெறித்தனமாக கத்தியால் தாக்கினார் . இதில் அவனது உடலில் 26 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது.
இதனால் ரத்த வெள்ளத்தில் அவன் கீழே சரிந்தான்.
அந்த பெண் தனதுமகனை முதியவரிடம் இருந்து காப்பாற்ற போராடியுள்ளார். அவரையும் முதியவர் கத்தியால் குத்தினார். அவரிடம் இருந்து தப்பிக்க அந்த பெண் வீட்டு குளியல் அறைக்குள் ஓடினார்.
ஆனாலும் அந்த முதியவர் கத்தியால் தாக்கி விட்டு அங்கிருந்து ஓடி விட்டார். இதில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அவர் செல்போன் மூலம் பொலி சாருக்கு தகவல் கொடுத்தார்.
பொலிசார் அங்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணையும், சிறுவனையும் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவ பரிசோதனையில் அவனது உடலில் கத்தி இருந்தது தெரியவந்தது. ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
சிறுவனின் தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் சிறுவனை ஈவு இரக்கம் இல்லாமல் குத்திக்கொன்ற ஜோசப் சுபா என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அவர் நில உரிமையாளராக இருந்து வருகிறார்.
இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் சண்டையின் எதிரொலியாக அமெரிக்காவில் வசித்து வந்த பாலஸ்தீனத்தை சேர்ந்த சிறுவனை முதியவர் குத்திக்கொன்றதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.