லியோ படத்திற்கு அடுத்தடுத்து வரும் சிக்கல்...
17 ஐப்பசி 2023 செவ்வாய் 11:48 | பார்வைகள் : 3629
நடிகர் விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் வரும் 19ம் தேதி திரைக்கு வருகிறது. இதற்கு காலை 9 மணி முதல் காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால், அதிகாலை 4 மணி மற்றும் 7 மணி காட்சிகளுக்கும் அனுமதி அளிக்குமாறு தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது என்றும், 7 மணி காட்சிக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்குமாறு தயாரிப்பு நிறுவனத்திற்கும் அறிவுறுத்தியது.
காலை 7 மணி காட்சிக்கும் அனுமதி கிடைப்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த பிரச்னை காரணமாக தயாரிப்பு நிறுவனம், தியேட்டர் உரிமையாளர்களிடம் படத்தை திரையிட அதிக தொகை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. போட்ட காசு வந்தால் போதும் என்ற நிலைக்கு தயாரிப்பு தரப்பு சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நெருக்கடி காரணமாக சென்னையில் பிரபலமான ஏ.ஜி.எஸ் போன்ற தியேட்டர் நிர்வாகிகள் படத்தை திரையிடுவதில் இருந்து பின்வாங்கியுள்ளனர். ஏ.ஜி.எஸ் சினிமாஸ் தியேட்டர் உரிமையாளரான அர்ச்சனா கல்பாத்தி எக்ஸ் தளத்தில், ''விநியோகஸ்தருடன் விதிமுறைகள் சிக்கலால் லியோ முன்பதிவுகளை துவக்க முடியவில்லை. இதனால் அனைவரின் சிரமத்திற்கும் வருந்துகிறோம். பொறுமையாகக் காத்திருந்ததற்கு நன்றி. இன்று மாலை 6:00 மணிக்குள் ஏதேனும் முன்னேற்றங்கள் இருந்தால் சொல்கிறோம்'' எனக் கூறியுள்ளார்.
இதனால் பல தியேட்டர்களில் குறிப்பிட்டபடி லியோ படம் திரையிடப்படுமா என்பது இன்னும் முடிவாகவில்லை. லியோ படத்திற்கு அடுத்தடுத்து வரும் சிக்கலால் தயாரிப்பு தரப்பு குழம்பி போயுள்ளது. இந்த ஏ.ஜி.எஸ் நிறுவனம் தான் விஜய்யின் அடுத்த படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.