புட்டினை சந்திக்கும் ஜனாதிபதி ரணில்
17 ஐப்பசி 2023 செவ்வாய் 13:52 | பார்வைகள் : 4258
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் உத்தியோகப்பூர்வமற்ற சந்திப்பில் ஈடுபட உள்ளதாக அறிய முடிகிறது.
Belt & Road திட்டத்தின் மூன்றாவது சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாடு பீஜிங்கில் இன்று ஆரம்பமானது.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கைக்குழு சீனா சென்றுள்ளதுடன், பல உலக நாடுகளின் தலைவர்களும் மாநாட்டில் கலந்துகொள்ள பிஜிங் விரைந்துள்ளனர்.
இந்நிலையில் மாநாட்டில் கலந்துகொள்ள வந்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன், ஜனாதிபதி உத்தியோகப்பூர்வமற்ற சந்திப்புகளை நடத்த உள்ளார்.
இதன்போது இஸ்ரேல் – பாலஸ்தீனக்கு இடையிலான போர், உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் உட்பட பல்வேறு சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவார் என்றும் அறிய முடிகிறது.
இதேவேளை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நாளைய தினம் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உடன் பேச்சு நடத்தவுள்ளார்.
உக்ரைன்மீது போர் தொடுத்துள்ளதால், போர்க்குற்றங்களின் அடிப்படையில் ரஷ்ய ஜனாதிபதிக்கு சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இதனால் வெளிநாட்டு விஜயங்களை ரஷ்ய ஜனாதிபதி தவிர்த்து வந்தார். தென்னாபிரிக்கா, இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச மாநாடுகளில் அவர் பங்கேற்கவில்லை.
எனினும், அவர் சீனா வந்துள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான உடன்படிக்கையில் சீனா கைச்சாத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.