பிரித்தானியாவில் விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை
22 ஐப்பசி 2023 ஞாயிறு 08:29 | பார்வைகள் : 3471
பிரித்தானியாவை Babet என பெயரிடப்பட்டுள்ள புயல் காரணமாக பல பகுதிகளுக்கு பெருவெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
ஸ்கொட்லாந்துக்கு இன்று, அதாவது, சனிக்கிழமை இரவு வரை, சிவப்பு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சிவப்பு அபாய எச்சரிக்கை, வேகமாக ஓடும் அல்லது ஆழமான பெருவெள்ளத்தால் உயிருக்கு அபாயம் ஏற்படலாம் என்பதைக் குறிக்கும் எச்சரிக்கையாகும்.
மின்சாரம் துண்டிப்பு, பெருமளவில் வெள்ளம் காரணமாக கட்டிடங்களுக்கு சேதம் ஆகிய அபாயங்களும் உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தைப் பொருத்தவரை, 353 பெருவெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
வடகிழக்கு இங்கிலாந்து, யார்க்ஷையர், வடமேற்கு இங்கிலாந்து, கிழக்கு ஆங்கிலியா, தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் மத்திய இங்கிலாந்து ஆகிய பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், Derbyshireஇலுள்ள Derwent நதியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மூன்று பலத்த பெருவெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
சில இடங்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் உயிருக்கு ஆபத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
Alyn நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அதன் கரைகள் உடைந்துள்ளன.
புயல் காரணமாக மின்சாரம் தடைபட்டுள்ளதால் சுமார் 55,000 பேர் நேற்று இருளில் இரவைக் கழிக்கவேண்டியிருந்தது.
இப்படி Babet புயல் காரனமாக, பெருவெள்ள அபாய எச்சரிக்கைகள், மின்தடை என மக்கள் சொல்லொணா அவதிக்குள்ளாகியுள்ளன.
இன்றும் பலத்த காற்றும் கனமழையும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், மக்கள் கவனமாக இருக்குமாறு வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.