ககன்யான் சோதனைக் கலனில் இருந்து எடுத்த வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ.!
22 ஐப்பசி 2023 ஞாயிறு 22:31 | பார்வைகள் : 2541
விண்வெளி ஆய்வில் வியக்க வைக்கும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள இந்தியா இதுவரை மனிதர்களை ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பவில்லை. எனவே மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் கனவு திட்டமாக வைத்திருந்தனர்.
இந்த கனவு திட்டத்தை இன்னும் 2 ஆண்டுகளில், அதாவது 2025-ம் ஆண்டு செயல்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். அதற்கு முன்னதாக, 3 கட்டங்களாக ககன்யான் விண்கலம் போன்று மாதிரி விண்கலத்தை வைத்து சோதனை நடத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டனர்.
அதன்படி முதல் கட்ட சோதனையை இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று வெற்றிகரமாக நடத்தி முடித்தனர். ககன்யான் மாதிரி விண்கலத்தை சிறியவகை ராக்கெட் மூலம் விண்ணில் சுமார் 16.6 கிலோமீட்டர் தூரத்துக்கு கொண்டு சென்று, அதன்பிறகு அதில் இருந்து மாதிரி விண்கலத்தைப் பிரிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. அதன்படி 17 கிலோ மீட்டர் உயரத்தில் ராக்கெட்டில் இருந்து மாதிரி விண்கலம் வெற்றிகரமாக தனியாக பிரிந்தது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவுக்குள் பாராசூட்டுக்கள் மூலம் அந்த மாதிரி விண்கலம் வங்கக்கடலில் மிதந்து கொண்டு இருந்தது. இதனை தொடர்ந்து, இந்திய கடற்படையினர் பத்திரமாக மீட்டு சென்னை துறைமுகத்துக்கு கொண்டுவந்தனர்.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற சோதனை வெற்றியடைந்த நிலையில், ககன்யான் சோதனைக் கலனில் இருந்து எடுத்த வீடியோவை இஸ்ரோ, தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளது