செல்வாக்கை நிரூபித்து காட்ட பழனிசாமி தீவிரம்... தனித்துப்போட்டி?
23 ஐப்பசி 2023 திங்கள் 06:02 | பார்வைகள் : 2526
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலுக்கான கூட்டணிக்கு வர, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் போன்ற கட்சிகள் மறுப்பதால், தனித்துப் போட்டி என்ற அதிரடி முடிவை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி எடுத்துள்ளார். எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதாவுக்கு பின், தன் ஒற்றைத் தலைமையின் செல்வாக்கை நிரூபித்து காட்டும் வகையில், இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்; அதற்கேற்ப கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் தீவிரம் காட்டுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக, அ.தி.மு.க., தலைமை சமீபத்தில் அறிவித்தது. அதேநேரத்தில், மற்ற கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி, லோக்சபா தேர்தலை சந்திக்க பழனிசாமி திட்டமிட்டார்.
விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், நாம் தமிழர் போன்ற கட்சிகள் கூட்டணியில் இடம் பெறும் என்றும், அ.தி.மு.க., தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது.
பா.ம.க., எதிர்பார்க்கும் தொகுதிகளை ஒதுக்க வாய்ப்பு இல்லை என்பதால், அக்கட்சிக்கு ஏற்கனவே கூட்டணி கதவை அ.தி.மு.க., அடைத்து விட்டது.
இந்நிலையில், தி.மு.க., கூட்டணியில் இருந்து, சில கட்சிகள் வெளியேறும் என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அ.தி.மு.க., கூட்டணிக்கு வரப்போவதில்லை என்ற முடிவை, சில தலைவர்கள் வெளிப்படையாக அறிவித்து விட்டனர்
ரத்த உறவு
அதாவது, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், 'நான் தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியேற போவதாகவும், அ.தி.மு.க., கூட்டணியில் இணைய போவதாகவும் வதந்தி பரப்புகின்றனர்; அதில் உண்மையில்லை' என்று கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணனோ, 'கடந்த ஒன்பது ஆண்டுகளாக, பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து செயல்பட்ட அ.தி.மு.க.,வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை' என்று தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'தைப்பூசத்திற்கு விடுமுறை வழங்க வேண்டுகோள் விடுத்தேன். அதை ஏற்று பழனிசாமி அறிவித்தார். தமிழர் என்ற ரத்த உறவு மட்டும் தான் அவரிடம் உண்டு; அ.தி.மு.க.,வுடன் கூட்டணி கிடையாது' என்றார்.
இப்படி, அ.தி.மு.க., தரப்பில் எதிர்பார்க்கப்பட்ட சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கூட்டணியில் சேர வாய்ப்பில்லை என்று தெரிவித்து விட்டதால், தனித்துப்போட்டி என்ற முடிவுக்கு பழனிசாமி வந்துள்ளார்.
இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
திராவிட கட்சிகளின் தேர்தல் வரலாற்றிலேயே, 2014 லோக்சபா தேர்தலின் போது, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, தன் பலத்தை நம்பி தனித்து களமிறங்கி, 37 தொகுதிகளில் வெற்றி வாகை சூடினார்.
ஜெயலலிதா பாணியில், ஒற்றைத் தலைமை என்ற அந்தஸ்துடன் தனித்து போட்டியிட்டு, அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, தன்செல்வாக்கை நிரூபிக்க பழனிசாமி விரும்புகிறார்.
வியூகம்
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக், தெலுங்கானா முதல்வர் சந்திரசேக ராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போன்றோர் தனித்து களமிறங்கி வெற்றி கண்டுள்ளனர்.
அவர்கள் வழியில், வரும் லோக்சபா தேர்தலில் தன் பலத்தை அறிய வும், கட்சியின் ஓட்டு சதவீதத்தை அதிகரித்து, அடுத்த சட்டசபை தேர்தலில் தன்னிடம் எந்த கட்சியும் பேரம் பேசாமல், கூட்டணிக்கு ஓடோடி வர வேண்டும் என்றும் பழனிசாமி கருதுகிறார்.
இதற்காக, பல்வேறு வியூகங்களை வகுத்து, கட்சியை வலுப்படுத்தி வருகிறார். 'அ.தி.மு.க., ஆதரவில் தான் மத்தியில் ஆட்சி அமையும்' என, பிரசாரம் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.