Paristamil Navigation Paristamil advert login

வடக்கு, கிழக்கில் ஹர்த்தால் - முற்றாக முடங்கிய யாழ்ப்பாணம்

வடக்கு, கிழக்கில் ஹர்த்தால்  - முற்றாக முடங்கிய யாழ்ப்பாணம்

20 ஐப்பசி 2023 வெள்ளி 09:08 | பார்வைகள் : 3108


முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி டி.சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தலுக்கு நீதியை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு வழங்கப்பட்டுள்ளதுடன் இங்கு முழுமையான கடையடைப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களான வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் வகையில் சில பிரதேசங்களில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோன்று கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் சில பிரதேசங்களில் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை பொறுத்தமட்டில் போக்குவரத்து, வைத்தியசாலை சேவைகள் மற்றும் சில அரச சேவைகள் தவிர ஏனைய சேவைகள் முற்றாக முடங்கியுள்ளன. நீதிமன்ற சேவைகளும் முற்றாக முடங்கியுள்ளது.

வடமாகாணத்தில் ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவு வழங்கப்பட்டுள்ள போதிலும் பாடசாலைக் கல்விக்கு பாதிப்பு ஏற்படவில்லை. கல்விச் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெற்று வருகின்றன.

கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி மற்றும் குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை மேற்கொண்டுவந்த முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி டி.சரவணராஜாவுக்கு வழக்கின் தீர்ப்புகளை மாற்றியமைக்குமாறு அரச தரப்பால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவர் கூறியதுடன், நீதிசேவை ஆணைக்குழுவுக்கு விடுமுறை கடிதமொன்றை வழங்கிவிட்டு நாட்டை விட்டு வெளியேறி இருந்தார்.

நீதிபதி டி.சரவணராஜாவுக்கு நீதியை வேண்டி கடந்த சில நாட்களாக நாடுமுழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவந்ததுடன், இந்த விடயத்தில் நீதியை நிலைநாட்டுமாறு ஐ.நா. உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகளும் குரல் கொடுத்திருந்தன.

என்றாலும், இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தை நிராகரித்துள்ளதுடன், நீதிபதி சரவணராஜாவுக்கு எவ்வித உயிர் அச்சுறுத்தல்களும் நாட்டில் இருக்கவில்லை என நீதி அமைச்சர் கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். அத்துடன், அவரது குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிசேவை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கூறியிருந்தார்.

இவ்வாறான பின்புலத்தில நீதிபதி டி.சரவணராஜாவின் விடயத்தில் நீதியை நிலைநாட்ட வேண்டுமென வலியுறுத்தி வடக்கு, கிழக்கின் தமிழ் கட்சிகள் இன்றைய தினம் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தன.  

ஹர்த்தால் காரணமாக யாழ்ப்பாணத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்