பிரெஞ்சு பணயக்கைதிகளை விடுவிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் - ஜனாதிபதி உறுதி!
20 ஐப்பசி 2023 வெள்ளி 12:15 | பார்வைகள் : 4895
ஹமாஸ் அமைப்பினரால் பணயக்கைதிகளால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள அனைத்து பிரெஞ்சு மக்களையும் விடுவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பிரான்ஸ் எடுக்கும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உறுதியளித்துள்ளார்.
இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினருடன் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று ஒக்டோபர் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உரையாடினார். வீடியோ அழைப்பினூடாக உரையாடிய ஜனாதிபதி, குடும்பத்தினர் அனைவரும் அவர்களது உறவினர்களை (பணயக்கைகளை) பிரான்சுக்கு பாதுகாப்பாக அழைத்து வருவதாக உறுதியளித்தார்.
சற்று முன்னர் எலிசே மாளிகை (ஜனாதிபதி மாளிகை) வெளியிட்ட அறிக்கையில் “அவர்கள் பாதுகாப்பாக விடுதலை செய்யப்படுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார்!” என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹமாஸ் படையினரின் தாக்குதலில் இதுவரை 28 பிரெஞ்சு மக்கள் கொல்லப்பட்டும், 7 பேர் காணாமல் போயும் உள்ளனர்.