குளிர்கால நோய்க்கான மாத்திரைகள் ஆபத்து (ANSM) தேசிய சுகாதார மருந்து ஆய்வகம். இன்னும் ஏன் குறித்த மாத்திரைகள் விற்பனையில்?
25 ஐப்பசி 2023 புதன் 06:40 | பார்வைகள் : 4588
கடந்த ஒக்டோபர் 23ம் திகதி ANSM இயக்குனர் Christelle Ratignier-Carbonneil குளிர்காலத்தில் ஏற்படும் சளி, மூக்கடைப்பு, தொண்டைக்குழி அழற்சி போன்ற நோய்களுக்கு மருத்துவரின் ஆலோசனை இன்றி மருந்தகங்களில் விற்கப்படும் Humex, Dolirhume, Actifed, Nurofen, Rhinadvil போன்ற மாத்திரைகள்: (AVS) பக்கவாதம், மாரடைப்பு போன்ற ஆபத்துக்களை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது என எச்சரித்து இருந்தார்.
மேலும் ஜலதோஷம் என்பது ஏழுநாள் முதல் பத்து நாட்களுக்குள் தானகவே மாறிவிடும் நோய், அதற்காக குறித்த மாத்திரைகளை எடுப்பது இதயத்திற்கு ஆபத்து எனவும் தெரிவித்தார்.
இந்த எச்சரிக்கையை ஏற்கனவே 2006 ஆம் ஆண்டு Prescrire என்ற மருத்துவ இதழ் கட்டுரையாக வெளியிடப்பட்டது. பின்னர் 2012 இல் உயர் சுகாதார ஆணையம் குறித்த கட்டுரையை வழிமொழிந்தது. 2012 முதல் 2017 வரை குறித்த மாத்திரைகளால் கடுமையான பக்கவாதம், 40 நோயாளர்களுக்கு ஏற்பட்டது என்றும், இதில் இருவர் பலியானார்கள் என்றும் ANSM தகவல் வெளியிட்டது. பல அறிவியல் அதிகாரிகளும் இது குறித்து கருத்துத் தெரிவித்திருந்தனர், இன்று (ANSM) தேசிய சுகாதார மருந்து ஆய்வகமும் எச்சரிக்கை விடுத்துள்ளது, இருப்பினும் மருந்தகங்களில் Humex, Dolirhume, Actifed, Nurofen, Rhinadvil போன்ற மாத்திரைகள் விற்பனையில் இருக்கிறது. ஏன் அவை மருந்தகங்களில் இருந்து அகற்றப்படவில்லை?
காரணம் குறித்த மாத்திரைகள் ஐரோப்பிய நாடுகளில் தாராளமாக விற்பனையில் இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் ஒரு நாடு மட்டும் மருந்துகளை தடைசெய்ய முடியாது. ஒரு மருந்தை, ஒரு தடுப்பூசியை ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளுக்கு பரிந்துரை செய்யவும், நிராகரிக்கவும், சந்தையில் இருந்து அகற்றவும் ஐரோப்பிய சுகாதார அமைப்புக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.
எனவே குறித்த விவகாரம் குறித்து ஏற்கனவே பிரான்ஸ் சுகாதார அமைப்பு, ஐரோப்பிய சுகாதார அமைப்புக்கு அறிவித்துள்ளது. ஐரோப்பிய சுகாதார அமைப்பு இப்போது ஆய்வுகளை நடத்தி வருகிறது அதன் முடிவுகள் பல மாதங்களுக்கு செல்லலாம், சில ஆண்டுகளும் செல்லலாம் என்றே அறியமுடிகிறது.
ஆனாலும் பிரான்ஸ் சுகாதார அமைப்பின் எச்சரிக்கையை அடுத்து Humex, Dolirhume, Actifed, Nurofen, Rhinadvil போன்ற மாத்திரைகளின் விற்பனை சுமார் 50% சதவீதம் பிரான்சில் பின்னடைவை சந்தித்துள்ளது.